பழநி பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகள் வழங்கப்படுமா?
பெரியகுளம்; தேனி மாவட்டத்தில் இருந்து பழநி முருகனை தரிசிக்க செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு, இருளில் ஒளிரும் குச்சிகள் போக்குவரத்து போலீசார் வழங்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு அடுத்தபடியாக, பழநி முருகனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிகம் உள்ளனர். தற்போது பெரியகுளத்தை கடந்து தினமும் நுாற்றுக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் செல்கின்றனர். நகர் பகுதியை கடக்கும்போது, மின்விளக்கின்றி இருளில் செல்லும் நிலை ஏற்படுகிறது. கடந்த காலங்களில் ஜனவரி முதல் வாரத்திலேயே மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும், போக்குவரத்து போலீசார், பக்தர்களுக்கு ஒளிரும் குச்சிகளை வழங்கினர். இதனால் பக்தர்கள் குச்சிகளின் உதவியால் இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்றனர். ஆனால், இந்தாண்டுநேற்று வரை வழங்கப்படவில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அதனை விரைவில் வழங்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.