உயிர் உள்ளவரை உண்மை!
நீ விசுவாசம் நல் மனசாட்சியும் உடையவனாயிரு! இந்த நன்மனச்சாட்சியை சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள், என்ற வசனம் பைபிளில் இருக்கிறது.ஒரு பக்தர் இந்த வசனத்தை திரும்பத் திரும்ப தன் மனதுக்குள் சொல்லியபடியே நடந்து கொண்டிருந்தார். வழியில், ஒரு ரயில் பாதையைக் கடக்க மேலே இருந்த பாலத்தில் ஏறினார். அந்த ஸ்டேஷனில், ஒரு மூலையில் பல பழைய ரயில் பெட்டிகள் உடைந்து நொறுங்கி கிடப்பதைப் பார்த்தார்.இந்த பெட்டிகள் புதிதாக இருந்த காலத்தில் எத்தனை பேரை ஏற்றிச் சென்றிருக்கிறது! எத்தனை புதுப்புது ஊர்களுக்கு போயிருக்கிறது! அன்று அருமையாய் ஓடிக்கொண்டிருந்த இந்த பெட்டிகள் இன்று ஆகாதவைகளாய் போய்விட்டதே! அவரது உள்ளத்தில் வருத்தம். அப்போது அவரிடம் கர்த்தர் பேசுவது போன்ற தொனி ஏற்பட்டது.மகனே! இந்த ரயில் பெட்டிகள் உபயோகப்படாமல் போனது போல, அநேக மக்கள் இன்று பயன்பட முடியாமல் போய்விட்டார்கள். அவர்கள் என்னால் நல்லபடியாகத் தான் பூமிக்கு வந்தார்கள். இப்போதோ, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு போன இந்த ரயில்பெட்டிகளைப் போல பயனற்றுப் போனார்கள். சிலரை பணம் வீழ்த்தியது. சிலரை வேறு சில ஆசைகள் வீழ்த்தின. இன்று புறக்கணிக்கப்பட்ட நிலையில் தேவநாமத்திற்கு இழுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள், என்று கேட்டது குரல்.கர்த்தரின் இந்த பேச்சைக் கேட்ட அந்த பக்தர், ஆண்டவரே! கடைசி மூச்சுவரை உமக்காக ஓடிக்கொண்டே இருக்க உதவி செய்யும். என்னைக் காத்துக் கொள்ளும். உம் வழிகளிலே உத்தமமாய் ஓட அனுக்கிரகம் செய்யும், என பிரார்த்தித்தார். தேவ பிள்ளைகளான நாம், நம் மனசாட்சியை சேதப்படுத்தாமல், கர்த்தருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அவர் நமது பாவங்களைக் களைய சிந்திய ரத்தத்தைக் கண்டு விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உயிர்த்துடிப்பு உள்ள வரை உன்னதமான கடவுளுக்காக உண்மையும், உத்தமுமாய் உழைக்க வேண்டும்.