மகாலக்ஷ்மி ஸ்தோத்ர மகிமை
ஓர் ஊரில் ஏழை அந்தண தம்பதி தங்கள் நான்கு பெண்குழந்தைகளுடன் வசித்து வந்தனர். வறுமையிலும் இறைவனிடம் மாறாத பக்தி கொண்டு தர்மநெறிப்படி வாழ்ந்து வந்தனர். ஆனாலும், அவர்கள் மனதில், தங்களுடைய நான்கு பெண்களை எப்படிப் படிக்கவைத்து, திருமணம் செய்து கொடுக்கப் போகிறோம் என்று நினைத்து வருந்தினர். வறுமையிலும் நெறி தவறாமல் வாழ்ந்து வந்த தம்பதிக்கு மகாலக்ஷ்மி அருள்புரிய திருவுள்ளம் கொண்டாள். ஒருநாள் ஒரு துறவி அவர்கள் வீட்டுக்கு வந்தார். அன்றைக்குப் பார்த்து அவர்கள் வீட்டில் ஒன்றுமே இல்லை. வீட்டில் ஒன்றுமே இல்லாத நிலையில் அதிதியாக வந்திருக்கும் துறவிக்கு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணம் அந்தத் தம்பதியை வாட்டி வருத்தியது. அந்த தம்பதியின் மனத் துன்பம் அந்தத் துறவிக்குப் புரியாதா என்ன? அவர் வீட்டுக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தம்பதியை வெளியில் அழைத்தார். எனக்கு பிக்ஷை அளிக்க எதுவும் இல்லையென்று வருந்தவேண்டாம். உங்கள் நிலை எனக்குப் புரிகிறது. உங்களுக்கு அருள்புரியவேண்டும் என்பதுதான் மகாலக்ஷ்மியின் விருப்பம்போலும். அவள்தான் என்னை இங்கு அனுப்பி இருக்கிறாள் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்கிறேன். அந்த மந்திரத்தை தினமும் 108 முறை பக்தியுடன் சொல்லி வாருங்கள். படிப்படியாக உங்கள் செல்வநிலையும் அந்தஸ்தும் உயரும் என்று கூறி மந்திரோபதேசம் செய்தார்.
மகாலக்ஷ்மி மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
மகாலக்ஷ்மி மகாலக்ஷ்மி
யேகி யேகி சர்வ சௌபாக்யமே தேகி ஸ்வாஹா
இந்த மந்திரத்தை அவர்களுக்கு உபதேசித்த துறவி அவர்களைப் பார்த்து, உங்கள் நிலைமை மாற வேண்டுமானால் நான் சொன்ன இந்த மந்திரத்தை ஜபம் செய்து வருவீர்களா என்று கேட்டார். அவர்களும் தங்களால் இயன்ற அளவு ஜபம் செய்வதாகக் கூறினர். பின்னர் அந்தத் துறவி சிலகாலம் சென்று திரும்பி வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். அந்தத் துறவியின் அறிவுரைப்படி அந்தணரின் மனைவி தினமும் மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தாள். அந்தத் துறவி கூறியது போல் அவர்கள் வீட்டில் மகாலக்ஷ்மி கடாக்ஷம் பெருகி அவர்களது நான்கு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து மிகுந்த செல்வத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தனர். சிலகாலம் சென்றதும் அந்தத் துறவி மீண்டும் வந்து அவர்களின் வாசலில் நிற்க, அந்த தம்பதி அவரது காலில் விழுந்து வணங்கி, அவரை உள்ளே அழைத்து வந்து விருந்து உபசரித்து, சுவாமி! நீங்கள் கூறியது போல் அந்த மகாலக்ஷ்மி ஸ்லோகத்தை நாங்கள் விடாமல் தினமும் ஜபித்து வருகிறோம். இப்பொழுது நாங்கள் செல்வச் செழிப்போடும், மிகுந்த சந்தோஷத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்றார்கள். துறவியும் அவர்களை ஆசீர்வதித்துச் சென்றார்.
தீபாவளிநாளில் செய்யும் லக்ஷ்மிகுபேர பூஜைக்கு முன்பாக மகாலக்ஷ்மி பூஜை செய்யும்போது மட்டும்தான் இந்த ஸ்லோகத்தை ஜபிக்க வேண்டும் என்பது இல்லை. தினமும் ஜபித்து வந்தால், நம்முடைய வீட்டில் மகாலக்ஷ்மியின் கடாக்ஷம் பரிபூரணமாக நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மகாலக்ஷ்மி மந்திரத்தைச் சொல்லும் முறை: தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் செய்துவிட்டு, வீட்டு பூஜையறையில் குத்துவிளக்கு ஐந்து முகமும் நெய்தீபம் ஏற்றி, வீடுமுழுவதும் சாம்பிராணி தூபம் போட வேண்டும். பூஜையறையில் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து ஒருமுகப்பட்ட மனதுடன் கண்களை மூடி மகாலக்ஷ்மியை தியானித்தபடி இந்த ஸ்லோகத்தை தினமும் குறைந்தபட்சம் 108 முறையாவது ஜபிக்க வேண்டும். முடிந்தவர்கள் மாலையிலும் ஜபிக்கலாம். மகாலக்ஷ்மிக்கு உகந்த வெள்ளிக்கிழமையிலும் ஜபிக்கலாம்.