வெற்றிலை மாலை யாகம்!
சென்னை, கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் அமைந்துள்ளது தேவிகருமாரி அம்மன் கோயில். இங்கே மூலவராக தேவி கருமாரி அம்மனும், உற்ஸவராக மகாபிரத்யங்கிரா தேவியும் அருள்பாலிக்கின்றனர். உற்ஸவர் மகாபிரத்யங்கிரா தேவிக்கு அமாவாசை தோறும், மாலை 6 மணிக்கு சிறப்பு யாகமும் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை ராகு கால சிறப்பு பூஜை நடைபெறுகின்றது. இந்த பூஜையின்போது, அன்னைக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. தொடர்ந்து அலங்காரமும் சிறப்பு ஆராதனையும் நடைபெறுகின்றது. இந்த பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை வெற்றிலையில் எழுதி மாலையாகக் கட்டி பிரத்யங்கிரா தேவிக்கு சாத்துகின்றனர். இந்த வெற்றிலை மாலைகள் அனைத்தும் வாரம்தோறும் சேகரிக்கப்பட்டு அமாவாசை அன்று நடக்கும் யாகத்தில் இடப்படுகின்றன. இதன் மூலம் பக்தர்களின் கோரிக்கைகள் அன்னையிடம் சேர்ந்து விடுகிறது என்பது நம்பிக்கை. வாரந்தோறும் நடத்தப்படும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையால் பக்தர்கள் பலர் பலனடைந்துள்ளனர்.
இந்த கோயிலின் சிறப்பம்சம், தேவி கருமாரிக்கு ஆடிப் பூரத்தில் செய்யப்படும் 1,08,000 வளையல் அலங்காரம்தான். இந்த அலங்காரத்தை தரிசிக்கும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை. 108 நாள் அலங்காரத் திருவிழாவில் ஸ்ரீதேவி கருமாரி அன்னை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளின் ரூபத்தில் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறார். விழாவின் பூர்த்தி நாளில் சண்டி மகா யாகம் நடைபெறுகிறது. இத்திருக்கோயிலில் ஸ்ரீதேவி கருமாரி அன்னைக்கு தை மாதத்தில் திருக்கல்யாண வைபவமும், ஜூலை மாதம் முதல் அக்டோபர் வரை சிறப்பு 108 நாள் அலங்காரத் திருவிழா ஆகியனவும் நடத்தப்படுகிறது.