ஏழுமலையானின் எழில் பிரம்மோத்ஸவம்
காணலுறுகின்றேன் கல்லருவி முத்துதிர
ஓணவிழவிலொலியதிர - பேணி
வருவேங்கடவா! என்றுள்ளம் புகுந்தாய்
திருவேங்கடமதனைச் சென்று.
உலகமுண்ட பெருவாயனான திருவேங்கடமுடையான் தான்தோன்றியாக நின்று திருவருள்பாலிக்கும் திவ்விய தேசமே திருமலை. திருமலைக்கும் திருமலையப்பனுக்கும் நிகரானதோ நிகரானவரோ எதுவும், எவரும், என்றும், எங்கும் இருக்காது இருந்திலர்.
மேலிருந்து கீழே இறங்கி வருவது அவதாரம். அதாவது தசாவதாரங்கள். அந்த தசாவதாரங்கள் எடுத்த அலுப்புத்தீர ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்தை விடுத்து பக்தர்களின் மீது உள்ள வாத்ஸல்யத்தால் (தாயன்பால்) புவிக்கு இறங்கி வந்து, அதுவும் வேங்கடாசல சிகரத்தின் மீது திருமார்பு மஹாலக்ஷ்மிடன் தோன்றி கலௌ வேங்கட நாயக: என அதாவது கலியுக கண்கண்ட தெய்வமாக, நாயகனாக இருந்து அனைவரையும் அரவணைத்து, காத்து வரும் மனிதக் குல தெய்வம் திருவேங்கடமுடையான் என்றால் அது மிகையாகாது.
பக்தவத்ஸலன், அடியார்களின் பாதுகாவலனான திருமலையப்ப ஸ்வாமியை மனிதர்கள் மட்டுமன்றி பிரம்மா முதலான தேவர்களும், ரிஷிகணங்களும், யக்ஷர், கின்னரர் முதலானவர்களும் நித்தியம் தரிசித்திருப்பர், ஆராதிப்பர். அவரவர்கள் சக்திக்கேற்ப அம்மலையப்பனுக்கு உத்ஸவங்களும் பண்ணுவர். இதுகுறித்தே குலசேகராழ்வார், பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும் துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல் மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே திருவேங்கடவன் சன்னிதியில் ஒவ்வொரு நாளும் ஒரு பண்டிகையாகவும் ஒவ்வொரு வேளையும் ஒரு பருவதினமாகவும் திருமலையே நித்திய கல்யாணம் பச்சை தோரணமாக காட்சியளிக்கின்றது.
இங்ஙனே வேங்கடாசலபதிக்கு எத்தனையோ உத்ஸவங்கள் எத்தனையோ ஊர்வலங்கள், நடந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் பிரம்மோத்ஸவம் மட்டுமே திருமலை வரலாற்றில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இத்திவ்விய ஸ்தலத்தில் ஸ்ரீநிவாசன் அவதரித்து உலக நன்மையை வேண்டி பிரம்மதேவனின் முன்னிலையில் நடத்திக் கொள்ளும் உத்ஸவம் இப்பிரம்மோத்ஸவம்.
பிரம்மதேவனின் முன்னிலையிலும், எம்பெருமானுடைய சேனாதிபதியான விஷ்வக்சேனருடைய மேற்பார்வையிலும், சுதர்ஸன் பகவானின் பாதுகாப்பிலும் நடைபெறும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனுக்கு பத்து நாள் உத்ஸவத்தில் சகல தேவதைகளின் சாந்நித்தியம் உண்டு. திருமலை திருத்தலமே ஒரு நவீன ஆன்மீகச் சுழலை நிலைக் கொள்ள வைக்கிறது.
இத்தகு உத்ஸவங்களில் பங்கு கொண்டால் போதும் ஜன்மம் திளைக்கும். ஏழுமலை மீது நடமாடினால் போதும் பிறவிதோறும் பண்ணின பாபங்கள் அனைத்தும் போகும். திருமலையப்பா நீயே துணையப்பா என்று கீர்த்தித்தாலே போதும் அனைத்து கோரிக்கைகளும் கை கூடும். கோவிந்தா கோவிந்தா என்று முன்னுக்கு அடி வைத்து சரணாகதி பண்ணினால் போதும் பல பிறவிகளில் கிடைத்திடாத முக்தியும் கை கூடும். எனவே புறப்படுங்கள்! பகவானை கண்ணாரக் காண்போம். மனதார சேவிப்போம்.
ஆனால் ஒன்று நாமனைவரும் திருமலையில் இருக்கும்வரை விதிமுறைகளை கடைபிடிப்போம். அத்திவ்விய தேசத்தின் புனிதத்தை பேணிக்காப்போம்! சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிப்போம்! அப்பரந்தாமனின் பேரருளுக்கு பாத்திரமாவோம்!!!