கொங்காலம்மன் கோவிலில் தேரோட்டம்
ஈரோடு: கொங்காலம்மன் கோவில் தைப்பூச தேரோட்டம், நேற்று கோலாகலமாக நடந்தது. ஈரோடு மாநகரில், நேதாஜி தினசரி மார்க்கெட் அருகே உள்ளது கொங்காலம்மன் கோவில். இங்கு தைப்பூச விழா விமர்சையாக நடக்கும். நடப்பாண்டு விழா, பிப்., 1ல் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வான, கோவில் தேரோட்டம் நேற்று காலை, 8:30 மணியளவில் துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் யாரும் கோவிலுக்கு வராததால் கெடுபிடி காணப்படவில்லை. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் தேரோட்டத்தில், உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மாநகரின் முக்கிய வீதிகளில் சுற்றி வந்த தேர், மாலையில் கோவிலை வந்தடைந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், மஞ்சள் நீராட்டு நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம், மாலை, 6:00 மணிக்கு தெப்போற்சவம் நடக்கிறது.