திருவைகாவூர்
இத்தல கோயிலிலுள்ள இரண்டாவது கோபுரத்தின் வாசற்படியின் தென்புறத்தில், தல வரலாற்றை விளக்கும் சுதைச்சிற்பம் உள்ளது. இதில் வில்வமரம், வேடன், சிவலிங்கம், புலி ஆகிய உருவங்கள் இடம்பெற்றுள்ளன. சிவராத்திரியன்று நான்கு காலங்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். நான்காம் காலத்தில் வேடனுக்கு காட்சிகொடுத்த ஐதீக விழா நடைபெறுகிறது. சிவராத்திரிக்கு அடுத்த நாளான மாசி அமாவாசையன்று பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெறும். இறைவன் வில்வநாதர் என்றும் அம்பிகை வளைக்கை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இங்கு கோயிலின் முன்புறம் யமதர்மானல் உண்டாக்கப்பட்ட யமதீர்த்தம் உள்ளது. சிவராத்திரியில் அடிமுடிதேடிச் சோர்வுற்ற பிரம்மனும் திருமாலும் இங்குவந்து வழிபட்டனர். அவர்களுடைய சன்னிதிகளும் இக்கோயிலில் உள்ளன. இதனால் இது மும்மூர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்கு நான்கு வேதங்களும் வில்வமரமாக உள்ளன. இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் கரத்தில் கோல் உள்ளது. சிவராத்திரி நாளில் அருள் பெற்ற வேடன் யமனுக்கு அஞ்சி கோயிலுக்குள் வந்த போது, அவனுக்குத் தஞ்சமளித்த சிவபெருமான். எமனை வெருட்ட கையில் தண்டமேந்தியதை இம்மூர்த்தம் உணர்த்துகிறதென்பர். யமனை விரட்டிய நந்தியும் அவன் திரும்ப வராதிருக்க கருவறையை நோக்காமல் வெளிவாயிலை நோக்கியவாறு அமர்ந்துள்ளார்.