அம்மனுக்கு மஞ்சள் பொங்கல்!
தை மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், அம்மனுக்கு மஞ்சள் பொங்கல் சமர்ப்பித்து வழிபடுவது அவ்வளவு விசேஷம். மற்ற விழாக் காலங்களில், விஸ்தாரமாக நிறைய பதார்த்தங்களைச் செய்து படைக்க இயலாத நிலையிலும் மஞ்சள் பொங்கலைப் படைக்கலாம்; மனமுவந்து ஏற்றுக் கொள்வாள் அம்பிகை! மங்களகரமானது என்பதால், கல்யாணப் பொங்கல் என்றும் இதற்கு ஒரு பெயர் உண்டு. சில குடும்பங்களில், பெண்கள் வயதுக்கு வந்ததும் அவர்களுக்கு முதல் உணவாக தாய்மாமன் பெயரைச் சொல்லி இந்தப் பொங்கலைச் செய்து கொடுப்பார்கள் என்பதால், அம்மன் பொங்கல் என்றும் ஒரு பெயர் உண்டு.
தேவையான பொருள்கள்:
அரிசி -1 கப்
துவரம் பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி, பருப்பைக் கழுவிக் களைந்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 பங்கு தண்ணீர் வைத்துக் குழைய வேகவிடவும், பிறகு, நெய் கலந்து இறக்கினால் போதும், மஞ்சள் பொங்கல் தயார்.
இதைப் படிக்கும்போது, சாதாரண சாதத்தில் நெய், பருப்பு சேர்த்து சாப்பிடுவதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் நினைக்கலாம்! சுவை அளவில் பெரும் வித்தியாசம் இருப்பதை சாப்பிட்டுப் பார்த்தால் தெரியும். தவிர, அம்மன் பிரசாதமாகும்போது அதன் சுவையே தனிதான்.