உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரவண பவ’ மந்திரம்

சரவண பவ’ மந்திரம்

”சுதர்சன யந்திரம், மகாலட்சுமி யந்திரம், ம்ருத்யுஞ்சய யந்திரம், கணபதி யந்திரம்... என தெய்வ மூ   ர்த்திகளுக்கான யந்திரங்கள் பல. அது போன்றதே முருகனுக்குரிய யந்திரம். முருகன் திருக்கோயில்களில் ’ஓம் ஷட்கோண பதயே நமோ நம:’ என்று சொல்லி, அங்கிருக்கும் யந்திரத்துக்கு சக்தியை ஏற்படுத்துவார்கள். அந்த சக்தி தான் நம்மை அவன் அருள் நோக்கி இழுக்கிறது” என்றார், ’குமாரஸ்தவம்’ என்ற தம் சொற்பொழிவில் கணபதி.

”யந்திர வழிபாடு என்பது எல்லா இடத்திலும் லுண்டு. முறையாக அது எழுதப்பட்டிருந்தால்தான் முறையான பலன் கிடைக்கும். கோயில்களில் கும்பாபிஷேக வைபத்தின் பொழுது, கோயிலில் இருக்கும் விக்ரகங்களின் அடியில் வெள்ளி, செப்பு கொண்டு அமைத்த யந்திரங்களை வைப்பார்கள். அவை மிகமிக விசேஷமானவை.

யந்திர வடிவங்களில் முக்கோணம், அறுகோணம், ஐங்கோணம் எனப் பல உண்டு. ’ஓம் ஷட்கோண பதயே நம:’ என்கிறார் பாம்பன் ஸ்வாமிகள் குமாரஸ்தவத்தில். ஆறு ஆதார சக்ரங்கள் என்பது முருகனுக்கும் உண்டு. எப்படி? ’அறுபடை வீடுகளில் ஆறு விதமான சக்ரங்களில் உட்கார்ந்து அருள்பாலிக்கிறார் முருகன்’ என்கிறார் பாம்பன் ஸ்வாமிகள்.

மூலாதார சக்ரத்தின் ஸ்தானம் திருப்பரங்குன்றம். துன்பம் களைந்து ஞானத்தை விளைவிக்கும் ஸ்தானம் திருச்செந்தூர். யோகத்தைத் தருவது பழனி. இதமாக இருப்பது சுவாமிமலை. சந்தோஷத்தைத் தருவது திருத்தணி. இதில் திருத்தணிக்கு செருத்தணி என்ற பெயர்தான் முன்பு இருந்தது. ’செரு’ என்றால் கோபம் என்று பொருள்; போர் என்றும் பொருள். போர் முடிந்து கோபத்தை அடக்கிக்கொண்டு, தணித்துக் கொண்டு, முருகப்பெருமான் சந்தோஷமாக இருக்கும் இடம் திருத்தணி. வினோதத்தைக் குறிக்கும் ஸ்தானம் பழமுதிர்சோலை. இப்படி ஆறு சக்ரங்களில் மாறி மாறி தம் சக்திகளை வைத்துக்கொண்டு நம்மைக் காத்தருளிக் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

கோணம் என்பதற்கு இன்னொரு பொருள் ஆசனம். ஐந்து விதமான ஆசனங்களில் அமர்ந்துகொண்டு நம்மீது கருணை மழையைப் பொழிந்து கொண்டிருக்கிறார் கந்தன். அனந்தாசனம், சிம்மாசனம், யோகாசனம், பத்மாசனம், விமலாசனம். ’ஷட்கோண’ என்பதற்கு இன்னொரு பொருள் உண்டு. அதாவது, ஆறு கோணமாக இருக்கும் வாயு மண்டலம். ’முருகா’ என மனமுருகிக் கூப்பிட்டுவிட்டால் போதும், வாயு வேகத்தில் ஓடிவந்து கூப்பிட்ட குரலுக்குரியவரை காப்பாற்றி விடுவார் என்பதும் பொருள்.

மோட்சம் அடைய வேண்டும் என்றால், அதற்கு ஒரு ஞானம் வேண்டும் அல்லவா? அந்த ஞானத்தை அருளக்கூடியவர் முருகப்பெருமான். ’சரவண பவ’ என்கிற மந்திரம் மிக மிக முக்கியமான மந்திரம். வயதான முனிவர் ஒருவர், காட்டில் தம் ஆசிரமத்தில் தபஸ் பண்ணிக்கொண்டிருந்தார். ஒரு நாள் தம் பிள்ளையிடம், ’ஆசிரமத்தை சிறிது நேரம் பார்த்துக்கொள். இதோ வந்து விடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு அவர் வெளியே போனார். அந்த சமயம் ஒரு ராஜா ஓடோடி வந்தார். ’நான் ஒரு பிராம்மணரை தெரியாமல் கொன்று விட்டேன். அதனால் என்னை, பிரம்மஹத்தி தோஷம் துரத்திக்கொண்டு வருகிறது. உன் தந்தை எங்கே? அவர்தான் இதற்கு சரியான உபாயம் சொல்லுவார்’ என ராஜா சொல்ல, உடனே இந்த முனிவரின் குமாரர், ’இதோ கங்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நான் சொல்லித்தரும் மந்திரத்தை மூன்று தடவை சொல்லிவிட்டு கங்கையில் மூழ்கி எழுங்கள். உங்களுக்கு எல்லாம் சரியாகி விடும்’ என்றபடியே, ’சரவண பவ’ எனும் மந்திரத்தைப் போதித்தான். ராஜா மகிழ்வுடன் கிளம்பினான்.

அப்பாவான முனிவர் சிறிது நேரத்துக்குப் பின் அங்கே வந்தார். மகன் அவரிடம் ராஜா வந்த கதையைச் சொன்னான். அதைக் கேட்ட முனிவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே மகனைப் பார்த்து, ’நீ வேடனாகப் போ’ என்று சாபம் கொடுத்து விட்டார். ஒரே மாத்திரையில் சரி பண்ணக் கூடியதான ஒன்றை, ஏன் தேவையில்லாமல் மூன்று மாத்திரைகள் கொடுத்து சரி செய்தாய் என்றுதான் முனிவருக்குக் கோபம். ஒரே தடவை ’சரவண பவ’ என்று சொன்னாலே எல்லாமே சரியாகி விடுமே! ஏன் மூன்று தடவை அதை உச்சரிக்கச் செய்தாய் என்பதில்தான் முனிவருக்குக் கோபம்.

’என்ன பிராயச்சித்தம் இதற்கு?’ என முனிவரின் மகன் நடுங்கியபடியே முனிவரைக் கேட்டான். ’ராமர் வனவாசம் வரும்பொழுது குகன் என்ற திருநாமத்தில் அவருக்கு நீ சேவை செய்து, படகோட்டி, கந்தலோகத்தை அடைவாய்’ என முனிவர் சொன்னார். ராமனின் தம்பியாகப் புகழ்பெற்ற குகனுக்கு, இப்படியொரு முன்கதை உண்டு. அந்த குகன் என்பதும், முருகப்பெருமானுக்கு உரிய திருநாமம் என்பது இன்னமும் பொருத்தம்.

ஆக, இந்த சரவண பவ என்கிற திருமந்திரம் ஒன்று போதும். நமது தோஷங்கள் அனைத்தையும் களைந்து, நமக்கு நிரந்தரமான சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய மந்திரம் அதுதான். ’சரவணபவ எனும் திரு மந்திரம் தனை சதா ஜபி என் நாவே... புறம் எரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த போத ஸ்வரூபன் பொற்பாதம் தவை பணிந்து’ ன்னு பாபநாசம் சிவன் ரொம்ப அற்புதமா எழுதியிருப்பார்.

ஆற்றில் ஜனித்தவன், ஆறுதல் அளிப்பவன், ஆறுமுகத்தான் ஆன முருகப்பெருமானை ஆறெழுத்து மந்திரம் சொல்லி ஆராதிப்பவர்கள், ஆற்றலும் நிறைவும் பெற்று ஆனந்திப்பார்கள். அதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !