வித விதமான விநாயகர்கள்!
வெள்ளை விநாயகர்: திருச்செங்கோடு மலைமீது படிகள் ஏறும் இடத்தில் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பெரிய வெள்ளை விநாயகரை வணங்கிவிட்டே பக்தர்கள் படி ஏறுகிறார்கள். பக்தர்களின் கோரிக்கை ஈடேறவும் தடை ஏதும் வராமலும் அருள்பவர் இவர் என்பது நம்பிக்கை.
கிராமத்து விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், சண்டிசாட்சி கிராமத்தில் எழுந்தருளியுள்ள வரசித்தி விநாயகர் மிகவும் பழமையானவர். விநாயகரின் பக்கத்தில் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட விநாயகர் மற்றும் முருகன் திருஉருவங்கள் காணப்படுகின்றன. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த கோயிலின் வெளியே நவகிரகங்களையும் உள்ளே அம்மனையும் தரிசிக்கலாம்.
கல்வி விநாயகர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கிருஷ்ணகிரி செல்லும் மெயின் ரோடில் எழுந்தருளியுள்ள அரசமரத்துப் பிள்ளையார் மிகவும் பழமையானவர். அரசோடு வேம்பும் இணைந்து வளர்ந்துள்ள மரங்களின் அடியில் பிள்ளையாரோடு நான்கு நாகர் உருவங்களும் காணப்படுகின்றன. ஊத்தங்கரையின் முக்கிய அலுவலகங்கள், கடைவீதி அருகில் இப்பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். பொதுத் தேர்வுக்கு முன்பு அதிகாலையில் இந்தப் பிள்ளையாரை தரிசித்து விட்டு தேர்வு எழுதிய மாணவர்களில் பலர் மாநில அளவில் முதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இதனால் இவர் கல்வி விநாயகர் என அழைக்கப்படுகிறார்.
தொட்டிலாடும் விநாயகர்: மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்கு கோபுரத்தில் பெற்றோரின் நடுவில் தொட்டிலாடும் குழந்தையாய் விநாயகர் சித்திரிக்கப்பட்டுள்ளார் சோமஸ்கந்தர் போல் இவ்வடிவம் சோமகணபதி என்ற அமைப்பாகும். இவரை கும்பிட்டால் குடும்ப உறவுகள் மேம்படும்.
பிளாட்பார பிள்ளையார்: விழுப்புரம் ரயில் சந்திப்பில் முதலாம் எண் பிளாட்பாரத்தில் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது. பயணம் பத்திரமாக அமைய வேண்டி தினமும் இவரை வணங்கிச் செல்வோர் ஏராளம்.
இரட்டை விநாயகர்: மதுரை அருகிலுள்ள வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியில் மந்தைத் திடலில் இரட்டை விநாயகர் கோயில் கம்பீரமாக எழுந்துள்ளது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தக் கோயிலில் கோபுரம், பீடம், மூஷிகவாகனம், முன் மண்டபத்தில் நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோயில் வெளிப்புறச்சுவரில் ஒரு பக்கம் தெய்வீக உருவங்கள் அழகான ஓவியங்களாக பெரிய அளவில் தீட்டப்பட்டுள்ளன. மற்றொரு பக்கத்தில் விநாயகர் உருவம் காட்சி தருகிறது. பழமையான இந்த இரட்டை விநாயகருக்கு முதலில் பூஜை செய்த பிறகே வாடிப்பட்டியிலுள்ள மற்ற கோயில்களில் திருவிழாக்கள் துவங்குகின்றன.