உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆரவாரமில்லாத தவன உற்சவம்

ஆரவாரமில்லாத தவன உற்சவம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலையின் தவன உற்சவம், எவ்வித ஆரவார முமின்றி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் உற்சவர் சிலை விவகாரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வந்தது. புதிய உற்சவர் சிலையை பயன்படுத்த கூடாது என பக்தர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில், புதிய உற்சவர் சிலையை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, இம்மாதம் நடைபெறவுள்ள பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன், புதிய உற்சவர், கோவிலை விட்டு வெளியே வரும், தவன உற்சவம் நேற்று நடைபெற்றது. புதிய உற்சவர், ஏலவார்குழலி அம்மனுடன் நேற்று மாலை, 7:00 மணிக்கு புறப்பட்டு, அருகேயுள்ள அரசு காத்த அம்மன் கோவில் வரை சென்று, மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. முதன் முறையாக கோவிலை விட்டு வெளியே வரும் புதிய உற்சவர், பெரிய ஆரவாரமின்றி புறப்பட்டு வந்தது. புதிய உற்சவர் சிலையை வணங்குவதில், பெரும்பாலானோருக்கு கருத்து வேறுபாடு இருப்பதால், தவன உற்சவத்தில் பலரும் பங்கேற்க வில்லை. புதிய உற்சவர் சிலையை பயன்படுத்த பக்தர்களின் எதிர்ப்பு அதிகளவில் இருப்பதால், கோவில் நிர்வாகம் அமைதியாக தவன உற்சவத்தை நடத்தி முடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !