கொடிமரம் அமையாத கோயில் தெய்வங்களுக்கு சக்தி குறைவா?
சாஸ்திரங்களில் ஓர் ஊர் என்று எடுத்துக் கொண்டால், அந்த ஊரில் எவ்வளவு பேர் வசிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் அந்த ஊரின் கோயில் நிர்மாணம் அமைந்தது, அந்த கோயிலின் சக்தி மக்களுக்குப் போய்ச் சேர்வதற்காக! கர்ப்பக்ரஹம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்றெல்லாம் சொல்வார்கள். இதெல்லாம் பார்த்தாலே, இந்த ஊரில் இத்தனை பேர் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது நமக்குப் புரியும். அப்படி மண்டபங்கள் அமைக்கும்போது, கோயில் ஆகம சாஸ்திரங்களில் இந்தந்த இடத்தில் இன்னின்ன தேவதைகள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படி பல சன்னிதிகள் வரும்போது, துவஜஸ்தம்பம் வந்து விடும். அதாவது, கோயில் உத்ஸவங்கள் நடைபெறுவதற்காக. எந்தக் கோயிலில் பிரம்மோத்ஸவம் முதலிய உத்ஸவங்கள் நடக்கிறதோ, அப்போது துவஜாரோஹணம் நடைபெற வேண்டும் என்பதற்காக, துவஜஸ்தம்பம் நடப்படச் சொல்லப்பட்டிருக்கிறது. துவஜஸ்தம்பம் இல்லை என்றால், சக்தி குறைவு என்றெல்லாம் கிடையாது. அந்த ஊரில் அவ்வளவு மக்கள் இருந்திருக்கமாட்டார்கள், ஒரே ஒரு சன்னிதியாக வைப்பார்கள் அல்லது பிரம்மோத்ஸவம் முதலிய உத்ஸவங்கள் தொடர்ச்சியாக நடைபெறாமல் இருந்திருக்கலாம். சன்னிதியின் சான்னித்தியத்துக்கும், துவஜஸ்தம்பத்துக்கும் சம்பந்தம் கிடையாது.