உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சியில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பொள்ளாச்சியில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் பக்தர்களின்"அரோகரா கோஷத்துடன், சூரன் வதை செய்யப்பட்டு சூரசம்ஹார விழா கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மாலை 3.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கோவில் வளாகத்தில் இருந்து சூரனை வதை செய்ய புறப்பட்ட சுப்பிரமணியர் சத்திரம் மற்றும் தெப்பக்குளம் வீதி இணையும் இடத்தில், மாலை 4.30 மணிக்கு அம்மன் சக்தி பெற்ற வேல் கொண்டு முதல் சூரன் தாரகனை வதம் செய்யப்பட்டது. தெப்பக்குளத்தில் இருந்து சென்ற சுப்பிரமணிய சுவாமி, வெங்கட்ரமணன் வீதியுடன் இணையுமிடத்தில் இரண்டாவது சூரனான சிங்கமுகன் தலையையும், ராஜாமில் ரோடு சந்திப்பில் தாலூகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில் மூன்றாவது சூரன் பானுகோபன் தலையையும், தேர்நிறுத்தம் சந்திப்பில் நான்காவது சூரன் சூரபத்மன் தலையும் வதம் செய்யப்பட்டது. சூரன் தலை வதம் செய்யும் ஒவ்வொரு இடத்திலும், பக்தர்கள் அதிகளவில் குவிந்து "அரோகரா கோஷம் எழுப்பினர். சூரனை வதை செய்த பின் சுப்பிரமணியர் பக்தர்கள் படைசூழ, "வெற்றிவேல் கோஷம் முழங்க மீண்டும் கோவிலுக்கு வந்தடைந்தார். மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியை காண பொள்ளாச்சி சுற்றுப்பகுதி மக்கள் சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி, வெங்கட்ரமணன் வீதி, பாலக்காடு ரோடு ஆகிய பகுதிகளில் குவிந்ததால், போக்குவரத்துக்கு ஸ்தம்பித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !