அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி விழா: நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
ப.வேலூர்: ப.வேலூர் அடுத்த, நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது. தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கூறப்படும், 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில், பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 12ல் கம்பம் நடப்பட்டு, திருவிழா கோலாகலமாக தொடங்கியது. நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், அக்னி மாரியம்மன் கோவில் முன் அமைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி வழிபட்டனர். தினமும் இரவு, அலங்கரிக்கப்பட்ட அம்மன், பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, தீ மிதிக்கும் ஆண் பக்தர்களும், பூவாரி போட்டுக் கொள்ளும் பெண் பக்தர்களும், 15 நாட்கள் விரதம் இருப்பதற்காக, மஞ்சள் கயிறு அணிந்து விரதமிருந்து வந்தனர். நேற்று, தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கூறப்படும், 62 அடி நீளமுள்ள பூக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்தும், பெண்கள் பூவாரி போட்டும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி அக்னிமாரியம்மனை வழிபட்டனர். நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று கிடா வெட்டுதலும், நாளை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ப.வேலூர் டி.எஸ்.பி., சுஜாதா தலைமையில், நாமக்கல் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.