உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சமலை முருகன் சிலையை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு

பச்சமலை முருகன் சிலையை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு

கோபி: கோபியில் உள்ள, 40 அடி உயர பச்சமலை முருகன் சிலையை புதுப்பிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, பச்சமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மலைகோவிலில், 40 அடி உயரத்தில் செந்தில் ஆண்டவர் சிலை உள்ளது. ஒரு பக்தர் உபயத்தால், 2002 மார்ச், 6ல் திறப்பு விழா கண்டது. முறையாக பராமரிக்காததால், சிலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கட்டமைப்பு வலுவிழந்துள்ளது. இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, சிலையை புதுப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கோவையில் இருந்து, சிலையை புதுப்பிக்க தாங்கள் முன்வருவதாக பக்தர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், சிலையை உபயம் செய்த, வடுகபாளையத்தை சேர்ந்த முருக பக்தரே புதுப்பித்து தருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தூரத்தில் இருந்தும் பிரகாசமாக காணும் வகையில், அதன் பின்னால் விளக்கு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழா முடிந்ததும், முருகன் சிலை வர்ணம் பூசி, மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !