சீதா - ராமர் கல்யாண உற்சவம் செய்யாறில் கோலாகலம்
செய்யாறு: செய்யாறு, விஜய கோதண்டராமர் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுனில், ஸம்பாதி குடும்பத்தினரால், 380 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீபாதுகா ேஸவக ஹனுமார் கோவில் கட்டப்பட்டு, வழிபாடு நடந்து வந்தது. கடந்த, 1917ல், ஸ்ரீஉவே கந்தாடை ஸம்பாதி நரசிம்மாச்சாரியா ரால், விஜய கோதண்டராமர் கோவில் கட்டப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் இங்கு ராம நவமி உற்சவம், ஹனுமன் ஜெயந்தி, நவராத்திரி உற்சவம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. நேற்று ராமநவமியை முன்னிட்டு, சீதா- ராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, காலை, 6:30க்கு விஸ்வரூப தரிசனம், 8:30க்கு ராமருக்கு விசேஷ திருமஞ்சனம், ராமானுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, யாகசாலை அமைக்கப்பட்டு, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், சுதர்ஸன, மஹாலஷ்மி, தன்வந்திரி ேஹாமங்கள் நடந்தன. மதியம், 1:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள லஷ்மி நாராயணன், லஷ்மி ஹயக்ரீவர், ராமானுஜர், நம்மாழ்வார், சுவாமி தேசிகன் ஆகிய சுவாமி மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு ராமானுஜர் பஜனையுடன் திருவீதி உலாவும், 7:00 மணிக்கு ராமபிரான் கருட வாகனத்தில் வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சுதா ஸ்ரீராமன், கே.எஸ்.ராமபத்ரன், கே.எஸ்.என்.ஸ்ரீராமன் ஆகியோர் செய்தனர்.