உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் கமலத் தேர் திருவிழா கோலாகலம்

வடாரண்யேஸ்வரர் கோவிலில் கமலத் தேர் திருவிழா கோலாகலம்

திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்த கமலத் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் சோமாஸ்கந்தர் ஒவ்வொரு வாகனத்திலும், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு, 10:00 மணிக்கு, யானை வாகனத்திலும் சோமாஸ்கந்தர் வீதியுலா வந்தார். நேற்று, பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கமலத் தேர் திருவிழா நடந்தது. விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, உற்சவ மூர்த்தியான சோமாஸ்கந்தர், அலங்கரிக்கப்பட்ட கமலத் தேரில் எழுந்தருளினார்.

பின், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் பச்சை கொடி அசைத்து, கமலத்தேரை துவக்கி வைத்தனர். மாட வீதிகளில் திருவீதியுலா வந்த தேர், பகல், 1:30 மணிக்கு காளியம்மன் கோவில் வளாகத்தில் நின்றது. அங்கு, திருவாலங்காடு கிராம பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில், பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின், மாலை, 3:30 மணிக்கு கமலத்தேர் அங்கிருந்து புறப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு கோவில் வளாகத்தை அடைந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று, காலை, 9:00 மணிக்கும், இரவு, 10:00 மணிக்கும், நடராஜர் பெருமானுக்கு திருக்கல்யாணம் அபிஷேகம் நடக்கிறது. நாளை, உற்சவர் சோமாஸ்கந்தர் பல்லக்கு மற்றும் கேடயம் வாகனத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். வரும், 19ம் தேதி வரை, பிரம்மோற்சவ விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !