பிள்ளையார்பட்டியில் மே 1ல் கும்பாபிஷேகம்: ஏப்.,24ல் யாகசாலை பூஜை துவக்கம்
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் மே1ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.நகரத்தார் கோயிலான விநாயகர் கோயில் பழமையான குடவறைக் கோயிலாகும். கோபுரங்கள்,தளவரிசைகள் பழுதுபார்க்கப்பட்டு திருப்பணிகள் நடந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. ஏப்.,24ல் காலை 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து இரண்டாம் நாளில் நவக்கிரஹ ஹோமம், நான்காம் நாள் மாலை முதலாம் யாகசாலை பூஜையும், ஐந்தாம் நாளான ஏப்.,28ல் 2,3-ம் காலயாகசாலை பூஜைகளும்,ஏப்.,29ல் 4,5 ம் கால யாகசாலை பூஜைகளும், ஏப்.,30ல் 6,7-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற உள்ளன.
மே 1ல் காலை 4:30 மணிக்கு எட்டாம் காலயாகசாலை பூஜையும்,கடம் புறப்பாடு காலை 8:00 மணிக்கும், கும்பாபிஷேகம் காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:30 மணிக்குள் நடைபெறும். மாலையில் மகா அபிஷேகம், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. ஏற்பாட்டினை பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் நகரத்தார் செய்துள்ளனர்.