உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு: தேனி கோயில்களில் சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டு: தேனி கோயில்களில் சிறப்பு பூஜை

தேனி: தேனி மாவட்டத்தில் தமிழ்புத்தாண்டை யொட்டி  கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து புத்தாண்டை கொண்டாடினர்.நேற்று காலை வீரப்ப அய்யனார் பச்சை பட்டு உடுத்தி வெள்ளை குதிரையில் மலைகோயிலுக்கு புறப்பட்டார். அல்லிநகரத்தில் வீதி, வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீரப்ப அய்யனாருடன் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சென்று நேர்த்திகடன் செலுத்தினர். முடிக்காணிக்கை செலுத்தினர். தேனியில் இருந்து வீரப்ப அய்யனார் கோயில் செல்லும் பாதையின் இருபுறமும் பக்தர்கள் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல், தண்ணீர் பந்தல் அமைத்து வழங்கினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமியை வழிபட்டனர்.

* போடி அருகே தீர்த்ததொட்டி ஆறுமுகநாயனார் கோயில்  சித்திரை முதல் நாளில் முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேம், தீபாரதனைகள் நடந்தது. மூலிகை கலந்த தீர்த்த சுனைகளில் பக்தர்கள் நீராடி முருகனின் அருளாசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டன. தக்கார் பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

போடி-தேனி மெயின் ரோட்டில் உள்ள சித்திரபுத்திரனார்  கோயிலில் சிறப்பு அபிஷேகம், விஷேச பூஜைகளும் நடந்தன. போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட்டன. சுப்பிரமணிய கோயிலில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சீனிவாசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு
பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தன. மேலத்தெரு சவுடம்மன் கோயில் விழாவில் தேவாங்கர் குலத்தை சேர்ந்தவர்கள் கொட்டகுடி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து, காவடி,
கத்தி போடும் நிகழ்ச்சிகள் நடந்தன. தீர்த்தங்களை கொண்டு சவுடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி
பெற்றனர். பழைய பஸ்ஸ்டாண்ட் சிவன் கோயில், ஆர்.ஐ., ஆபீஸ் ரோட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தன.

-* பெரியகுளம், வரதராஜப்பெருமாள் கோயிலில் பக்தர்கள்  கோவிந்தா, கோவிந்தா நாமம் ஒலிக்க, சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில், வரதராஜப்பெருமாள்  கோயில் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில், மீனாட்சியம்மன் கோயில், தென்கரை  கம்பம்ரோடு காளியம்மன் கோயில், மாரியம்மன் கோயில், கைலாசபட்டி, கைலாசநாதர் கோயிலில், காளாஸ்திரிநாதர்,
தீர்த்தத்தொட்டி கரையில் உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானை மற்றும் பாம்பாற்று பக்த ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஷீரடி சாய்பாபா கோயிலில் பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிஸ்கட் பிரசாதம் வழங்கப்பட்டது.

* பெரியகுளம் சவுடேஸ்வரி கோயிலுக்கு, தீர்த்த தொட்டியிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

பக்தர்கள் உடம்பில் கத்தி போட்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை  கோயில் நிர்வாகத் தலைவர் தங்கமணி, துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

* ஆண்டிபட்டி: தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை திருவிழா நடந்தது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று  வேலப்பர் கோயில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாளில் மாவட்டத்தின்  பல்வேறு பகுதியில்இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு படையல் செய்து வழிபாடு செய்வர். பக்தர்கள் பொங்கலிட்டு, மொட்டை போட்டு,மாவிளக்கு  ஏற்றி வேலப்பருக்கு சிறப்பு வழிபாடு செய்வர். ஆண்டிபட்டியில்  இருந்தும் சுற்று கிராமங்களில் இருந்தும் 20 கி.மீ.,தூரம் பாதயாத்திரையாக சென்று பலரும் வேலப்பரை வழிபட்டனர்.

*சக்கம்பட்டியில் உள்ள வீரப்ப அய்யனார் கோயிலில் சித்திரை  விழா நடந்தது. விழாவில் பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஊர்வலம் சென்று சாமிக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு
பூஜைகள் நடந்தது.

ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், காளியம்மன்  கோயில்,சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில்,  மேலப்பிள்ளையார் கோயில், ரயில்வே பீடர் ரோடு சிவன்,
கருப்பசுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !