சமாதானம் தந்த வெற்றி
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் மீது சக அறிஞர்கள் பொறாமை கொண்டனர். அவரைப் போல் புகழ் பெற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் தவித்த அவர்கள், அவரை அவமானப்படுத்த நினைத்தனர். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து, சாக்ரடீசை அழைத்தனர். அவர் தன் நண்பர்களுடன் வந்தார். சாக்ரடீசின் இலையில் அழுகிய பழங்களும், கெட்டுப்போன உணவும் வைக்கப்பட்டன. சாக்ரடீசின் நண்பர்கள் அதிர்ந்தனர். நல்ல உணவு பரிமாறும்படி விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களிடம் சொல்ல முற்பட்ட போது, சாக்ரடீஸ் சைகை செய்து அமைதிப்படுத்தி விட்டார். மிக ரசனையாக அவர் உணவைச் சாப்பிட்டார். வெளியே வந்த நண்பர்கள், “ஏன் இப்படி செய்தீர்கள்? அவர்களை ஒரு கை பார்த்திருக்க வேண்டாமா?” என்றனர்.“அப்படி நான் கோபப்பட்டு செய்திருந்தால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பர். கைகொட்டி சிரித்திருப்பர். அந்த வெற்றியை நான் அவர்களுக்குக் கொடுக்க விரும்பவில்லை,” என இதமாகப் பதிலளித்தார்.“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக,” என்கிறார் இயேசுநாதர். நம்மை அவமானப்படுத்துவோரிடமும் சமாதானம் கொள்வதன் மூலம் நாம் தோல்வியடைந்ததாக கருத வேண்டியதில்லை. நிஜத்தில் நாமே வெற்றி பெற்றவர்கள்.