சாலமனின் வாழ்க்கைப் பாடம்
மன்னன் சாலமன் நீதிமான். ஒரு குழந்தையுடன் வந்த இரண்டு பெண்கள், அது தன்னுடையது என வாதாடிய போது, வாளால் குழந்தையை இருகூறாகப் பிரித்து தருவதாக சொல்லி, உண்மைத்தாயிடம் சரியாக குழந்தையை ஒப்படைத்தவர். ஒரு சமயம் சாலமனின் தந்தை தாவீது, இஸ்ரவேலில் ஒரு ஆலயம் நிர்மாணிக்குமாறு கட்டளையிட்டார். அதை ஏற்ற சாலமன், சிறப்பாக கட்டி முடித்தார். அவரது சேவையை கண்டு மகிழ்ந்த ஆண்டவர், “சாலமனே! ஜெருசலேமில் நீ கட்டிய ஆலயத்தை ஆசிர்வதிக்கிறேன். உன் தந்தையைப் போல் நீயும் கடைசி வரை என் பாதையில் நடந்தால், உன் அரசாட்சி கடைசி வரை அழியாது. ஆனால் நீயோ, உனது மக்களோ என்னைப் புறக்கணித்தால், உன் மாளிகையும், இஸ்ரவேல் நாடும் அழிந்து போகும்,” என்றார். காலம் உருண்டது. சாலமனுக்கு செல்வச்செருக்கு, பிறர் தன்னை புகழ்ந்ததால் ஏற்பட்ட மமதை என எல்லாமுமாகச் சேர்ந்து, மனதை மாற்றி விட்டது. கணக்கற்ற பெண்களை திருமணம் செய்தார். கடும் வரி விதித்து சுகபோகமாக வாழ்ந்தார். இதனால் சாலமனை மக்கள் வெறுத்தனர். இதையறிந்த பகைவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டைப் பறித்தனர். தன் நாடு தன் கண்ணெதிரிலேயே துண்டு துண்டானது கண்டு உயிர் விட்டார் சாலமன். மக்கள் எப்படி வாழ வேண்டும் என மூவாயிரம் நீதி மொழிகளைச் சொன்ன சாலமன், அதில் ஒன்றைக்கூட கடைப்பிடிக்காமல் தன் புகழை, ஒரு கறையுடன்தான் தக்க வைத்துக் கொண்டார். நாம் சாலமனின் நற்குணங்களை கடைபிடித்து, பிற்கால வாழ்க்கையை பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து அவரது விசுவாசமுள்ள ஊழியராகத் தொடர்வோம்.