திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா: காவடிகளுடன் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த சித்திரை மாத கிருத்திகை விழாவில், காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், மூலவரை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோவிலில், நேற்று, சித்திரை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவைஒட்டி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மலர் மற்றும் மயில் காவடிகள், வாய் மற்றும் உடலில் அலகு குத்தியும் மூலவரை தரிசித்தனர்.