கரூர் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் விழா
கரூர்: தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில், குண்டம் இறங்கும் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கரூர் மாவட்டம், தவுட்டுப்பாளையம் மகாமாரியம்மன் கோவில் குண்டம் இறங்கும் திருவிழா, கடந்த, 25ல் துவங்கியது. அன்று, தவுட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள்,
காவிரி ஆற்றுக்குச் சென்று ஊர்வலமாக தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, 30ல், தீக்குண்டம் அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து நேற்று முன்தினம், அதிகாலை, 3:00 மணிக்கு, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி கோவிலுக்கு மாலையில் வந்தனர். பின், ஏராளமான ஆண்களும், பெண்களும் அங்கு தயாராக
இருந்த தீக்குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று பெண்கள் பொங்கல் வைத்து மகாமாரியம்மன் முன் படையல் வைத்து, அபிஷேகம் செய்தனர். இன்று மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.