தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா யானை ஊர்வலம் நடந்ததால் குதூகலம்
குன்னுார் : குன்னுாரில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகு, யானை அணிவகுப்புடன் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. ஒன்றரை மாதங்கள் நடக்கும் இந்த திருவிழாவில், நாள்தோறும் பல்வேறு உபயதாரர்கள் சார்பில், ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நேற்று குன்னுார் சந்திரா காலனி மக்கள் சார்பில், அம்மன் திருவீதி உலா நடத்தப்பட்டது. முன்னதாக சந்திராகாலனி பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து செண்டை மேளம் முழங்க யானை அணிவகுப்பு நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில், சிறப்பு அலங்காரத்தில், அம்மன் திருவீதி உலா நடந்தது.