உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா

பரமக்குடி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே 9 இரவு பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். நேற்று காலை 9:45 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து பரிவாரங்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி யாகசாலையில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து நான்கு நாட்கள் யாகபூஜைகள், இரவு பெருமாள் ஆடி வீதியில் வலம் வந்து யாகசாலை முன் அர்ச்சகர்களின் வேத கோஷம் முழங்க, சிறப்பு தீபாராதனை நடக்கும். மே 9 காலை 8:00 முதல் 9:00 மணிக்குள் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அன்று இரவு 2:00 மணிக்கு மேல் தீ வெட்டிகள் வெளிச்சத்தில், பெருமாள் ’கள்ளழகர்’ திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் அலங்காரமாகி வைகை ஆற்றில் இறங்குவார். இதனையொட்டி கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் ராட்டினங்கள், சர்க்கஸ் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !