தோகைமலை சிறுத்தொண்டர் நாயனார் கோவிலில் இருந்த மரகதலிங்கம் எங்கே?
தோகைமலை சிறுத்தொண்டர் நாயனார் கோவிலில் இருந்த மரகதலிங்கத்தை, வி.ஏ.ஓ., குடும்பத்தினர் அபகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கோவில் சொத்துகளை முறைகோடாக பயன்படுத்தி, கோவிலையும் பூட்டிவைத்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த, தோகைமலையைச் சேர்ந்த வி.ஏ.ஓ., பெரியசாமி, 58, என்பவர் மீது, முன்னாள் ராணுவ வீரர் மோகனசுந்தரம், கலைமணி, சிங்காரம் ஆகியோர் நேற்று முன்தினம், குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், வி.ஏ.ஓ., பெரியசாமி, சிறுத்தொண்டர் நாயனார் மடத்திற்கு சொந்தமான மரகதலிங்கத்தை, தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும், கோவில் நிலத்தில், 21 கடைகள்
கட்டி வாடகைக்கு விடுவதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்.
மேலும், மேற்கண்ட நிலத்திற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்களை, தன்னுடைய உறவினர்களின் பெயரில் பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், குளித்தலை ஆர்.டி.ஓ., சக்திவேல் உத்தரவின்படி, தாசில்தார் அருள், நேற்று காலை, 9:00 மணியளவில், சம்பந்தப்பட்ட நிலம், பூட்டிய நிலையில் உள்ள கோவில் மற்றும் மற்ற இடங்களை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, தாசில்தார் அருள் கூறியதாவது: வி.ஏ.ஓ., பெரியசாமி மீது ஆதாரமற்ற புகாரை தெரிவித்துள்ளனர். கோவில், நிலங்கள் அவருடைய தந்தை காலத்தில் இருந்தே, அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை, இந்துசமய அறநிலையத்துறையினர் உறுதிசெய்துள்ளனர். விரிவான அறிக்கை, ஆர்.டி.ஓ.,விடம் சமர்ப்பிக்கப்படும்.
தோகைமலை ஊர் நாட்டாமை ரங்கநாதன் கூறியதாவது: கோவிலுக்கு சொந்தமாக, ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. கோவிலில், ஒரு அடி உயரத்தில் மரகதலிங்கம் இருந்தது. வி.ஏ.ஓ.,வாக
இருந்த பெரியசாமியின் தந்தை காலத்தில், கோவில் அர்ச்சகர்கள் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அர்ச்சனை செய்து வந்தனர்.
கடந்த, பத்து ஆண்டுகளுக்கு மேலாக கோவிலை பூட்டிவிட்டனர். கோவில் இருந்த மரகதலிங்கத்தை, வி.ஏ.ஓ., பெரியசாமி தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். கோவில் நிலத்தில் கட்டப்பட்ட கடைகளின் வாடகையும், முறைகேடாக அனுபவித்து வருகிறார்.
எனவே, கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்தவும், சொத்துகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துசமய அறநிலையத்துறை கடம்பர்கோவில் செயல் அலுவலர் யுவராஜ் கூறியதாவது: கரூர், இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரிய நாராயணன் உத்தரவின்பேரில், தோகைமலை சிறுதொண்ட நாயனார் மடத்துக்கு சொந்தமான மரகதலிங்கம், நன்செய், புன்செய் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் வருகிறது. இதுதொடர்பாக, சரக ஆய்வாளர் மூலம் தலஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார்தாரர் சிங்காரம், முன்னாள் ராணுவ வீரர் மோகனசுந்தரம் ஆகியோர் கூறியதாவது: சிறுதொண்ட நாயனார் மடத்திற்கு சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளை, வி.ஏ.ஓ., பெரியசாமி அபகரித்துள்ளார். கோவில் நிலத்தை, தன் பெயருக்கு பட்டா பெற்றுள்ளார். கோவில் நிலத்தில் கடைகள் கட்டி மோசடியில் ஈடுபட்டு வருகிறார். கோவிலையும் பூட்டி வைத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை
எடுக்காத பட்சத்தில், பல்வேறு போராட்டங்களை செய்வோம். வி.ஏ.ஓ., பெரியசாமி கூறியதாவது: என் மேல் கூறப்பட்ட புகார் குறித்து, தாசில்தார் நேரில் விசாரித்தார். கோவில் மற்றும் நிலங்கள் என்னுடைய தந்தை காலத்தில் இருந்தே அனுபவித்து வருகிறோம். நான் பதவிக்கு வந்த பின், கோவில் நிலத்தை என் பெயரில் மாற்றிக்கொள்ளவில்லை. பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -