உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சம் முறை ருத்ர பாராயணம் கோடி முறை வில்வார்ச்சனை!

லட்சம் முறை ருத்ர பாராயணம் கோடி முறை வில்வார்ச்சனை!

பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமான சிதம்பரத்தில், ஆனந்தக் கூத்தாடும் நடராஜர் கோயிலில், அமர்க்களமாக ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஓர் உலக உன்னதம்! கோயில் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு லட்சம் முறை, சிவனுக்குப் பிரியமான ருத்ரத்தை பாராயணம் செய்யும் லட்ச ருத்ர பாராயணம், அதுமட்டுமல்லாமல் கோடி அர்ச்சனை, லட்ச ஹோமம் என எல்லாமே பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கணக்கில் தீட்சிதர்கள் அமர்ந்து ருத்ர மந்திரம் ஓத, அதன்பின் வில்வ அர்ச்சனை மேற்கொள்ளப்படும். இந்த கண்கொள்ளாக் காட்சி, உலகில் எங்கும் இதுவரையில் நடந்திராத ஆன்மிக அற்புதம். உலக மக்களின் நன்மைக்காகவும், அனைத்து ஜீவராசிகளுக்காகவும் நடத்தப்படும் லட்ச ருத்ர பாராயணம்

ஸ்ரீருத்ரம் என்பது சிவனுக்கு உகந்த மந்திரம். இன்னும் சொல்லப் போனால், ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரமே, ருத்ரத்தில் உள்ள மந்திரம்தான். வேதங்களில் மையத்தின் மையமாகிய இந்த மந்திரத்தின் மகிமை வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. நான்கு வேதங்களில் பிரதானமான 3 வேதங்களான ரிக், யஜுர், ஸாம வேதங்களின் மையம் யஜுர் வேதம். அதில் உள்ள 7 காண்டங்களில் மையமான 4-வது காண்டத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் ருத்ரம், சமகம் ஆகிய சக்திவாய்ந்த இரு மந்திரங்கள். இறைவனை நமஹ என்று போற்றிச் சொல்லுவது நமகம்.... அதாவது ருத்ர மந்திரம். அதேபோல, இறைவனிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவதற்கான மந்திரம் சமகம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேவைகள், ஆசைகள். அதைக் கேட்டுப் பெறுவதற்கான மந்திரம், சமே என்று முடியும். எளிமையாகச் சொல்வதானால், போற்றுவது நமஹ, கேட்பது சமே. இந்த நமகமும் சமகமும் ஒருங்கே அமையப் பெற்ற வேதபாகத்தின் பெயர்தான் ஸ்ரீருத்ரம். ஸ்ரீருத்ரத்தில் 11 அனுவாகங்கள். அதில் மையான 6-வது அனுவாகத்தில், 183 முறைகளுக்கு மேல் நமஹ என்று போற்றப்படும். அவற்றின் மையத்தில்தான் ஓம் நமசிவாய என்னும் மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது.

அப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த நமகமும் சமகமும் ஒருங்கே பெற்ற ஸ்ரீருத்ரத்தை எவர் ஒருவர் பாராயணம் செய்கிறாரோ, அவருக்கு அந்த மூன்று வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது புராண, இதிகாசங்களின் கூற்று. அதேபோல, சிதம்பரமும் உலகின் மையத்தில் அமைந்திருக்கும் ஸ்தலம். இது மெய்ஞானத்தின்படி மட்டும் அல்லாமல், விஞ்ஞானத்தின்படியும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் கோயிலில் அமைந்துள்ள பொன்னால் வேயப்பட்ட அம்பலத்தின் கீழ் கால் தூக்கி ஆடும் நடராஜர் இருக்குமிடம் - அதிலும் தூக்கிய அந்தக் காலின் கீழுள்ள புள்ளிதான் உலகின் நடு மையப்புள்ளி என்பதை இப்போது நாஸாவே கண்டறிந்துள்ளது. எனவே, வேதங்களின் மையமான ருத்ரத்தைப் பாராயணம் செய்ய, புவியின் மையமான சிதம்பரம் பொருத்தமான ஸ்தலம்! மேலும், இறைவன் தேர்ந்தெடுத்து அமர்ந்த இடம் பூலோகக் கயிலாயம்! மற்ற கோயில்களிலிருந்து பல அம்சங்களில் வேறுபட்டுத் திகழும் வித்தியாசமான ஸ்தலம், சிதம்பரம்!

நம் மதத்தின் சிறப்பம்சமே அது கொடுத்திருக்கும் சுதந்திரமும், நமக்குப் பிடித்த விதத்தில், இயன்ற நேரத்தில், இருக்குமிடத்திலேயே கூட இறைவனை வணங்கக் கூடிய இலகுத்தன்மையும் தான். இதற்கு ஓர் எளிய உதாரணத்தைக் குறிப்பிடலாம். அனுதினமும் சூரிய அஸ்தமனமும் சந்திர உதயமும் சேரும் நேரம்தான் பிரதோஷ காலம். இந்த நேரம் சிவனை வணங்குவதற்கு உகந்த காலம். ஆனால், தினந்தோறும் அந்நேரத்தில் சிவனை வணங்க முடியாதவர்கள், மாதம் இருமுறை வரும் பிரதோஷத்தில் வணங்கலாம் என்ற சுதந்திரம் உண்டு. அதுவும் இயலாதவர்கள். சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் வணங்கலாம். அதைப்போலத்தான் ருத்ரமும், மூன்று வேதங்களைச் சொல்ல முடியாதவர்கள் ருத்ரம் மட்டும் பாராயணம் செய்யலாம் அதையும் செய்ய இயலவில்லையா... நீ நமசிவாய மந்திரத்தை மட்டுமே சொல்லலாம். இறைவனிடம் பக்தி செய்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. மலர்களால் அர்ச்சனை, வாசனை திரவியங்களால் அபிஷேகம், பகவான் நாமத்தைச் சொல்லும் நாமசங்கீர்த்தனம், பஜன், வேதமந்திர உச்சாடனம்... இப்படிப் பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் ருத்ராபிஷேகம். இப்போது லட்சம் முறை ருத்ர பாராயணம் மட்டுமல்லாது, கோடி வில்வ அர்ச்சனையும் நடைபெறுகிறது. ஏக வில்வம் சிவார்ப்பணம் என்கிறது லிங்காஷ்டகம். ஒரே ஒரு வில்வ இலை கொண்டு சிவனைத் துதித்தாலே, கோடி வில்வம் போட்டு அர்ச்சித்ததற்கு சமம். இங்கே கோடி வில்வ அர்ச்சனை செய்வதால், கோடி கோடி பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

லட்ச ஹோமம்: பொதுவாகக் கோயில்களில் யாகம், ஹோமம் ஆகியவற்றைச் செய்வதற்கு விதிகள் உண்டு. லட்ச ஹோமத்தில் 9 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, ஒரு குண்டத்துக்கு 12 தீட்சிதர்கள் என 108 தீட்சிதர்கள் அமர்ந்து சகஸ்ர நாமாவளி (சுவாமிக்கு அம்பாளுக்கும்) சொல்லி, ஆஹுதி செய்வார்கள். ஆவணி மாதத்தில், பவித்ராரோஹண மகாபிஷேகம் எனப்படும் நடராஜருக்கு பூணூல் சார்த்தும் வைபவம் நடக்கிறது. சர்வே ஜனா: சுகினோ பவந்து என்ற வேதவாக்கியத்தின் அடிப்படையில் பூமியில் வாழும் புல், பூண்டு, பறவை, மிருகம், மனிதன் என அனைத்து உயிர்களும் நலமாய் வாழவேண்டி, நடராஜருக்கு நடத்தப்படும் இந்த லட்ச ருத்ராபிஷேக விழாவில் தினமும் மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து வணங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !