உள்ளூர் செய்திகள்

நாத வழிபாடு!

ஓம் என்னும் பிரணவ ஒலியிலிருந்தே பிரபஞ்சம் முதலான அனைத்தும் தோன்றியதாக ஆகமங்கள் கூறுகின்றன. ஆதிமுதல்வனான ஈசனே நாத வடிவானவன் என்று சொல்லப்படுகிறது. எனவேதான் ஒலியின் முக்கியத்தை உணரும் பொருட்டும், அதனால் விளையும் நன்மைகளை நாம் பெறும் பொருட்டும் கோயில்களில் இசைக்கருவிகளை ஒலிக்கிறார்கள். இதற்கான இசைக்கருவிகளையும் முன்னோர் வகுத்துக் கூறியுள்ளனர். வாத்தியங்களால் உண்டாக்கப்படும் ஓசைகளை பஞ்சபூதங்களின் அடிப்படையில் ஐந்துவகையாகப் பகுத்துக் கூறுகிறது வாதுளாகமம். தினமும் ஆதவன் உதிக்கும் நேரத்தில் பஞ்சமகாசப்தத்தை எழுப்ப வேண்டுமென வலியுறுத்திச் சொல்லியுள்ளனர். இவ்வாறு எழுப்பப்படும் ஐவகை ஒலிகளால் நாட்டில் அசுபம் நீங்கி விடும்; உயிரினங்களிடமுள்ள அறியாமை எனும் இருள் அகலும் என்று பயனும் உரைக்கப்பட்டுள்ளது. கட்டையிலிருந்து உருவாவது தாருஜம்; சங்கிலிருந்து நீரின் அம்சமாய் உருவாவது ஆப்யம்; வெண்கலம் முதலான உலோகத்திலிருந்து எழுவது லோஹகம்; துளைகளிலிருந்து தோன்றுவது சுஷிரஜம்; வாய்ப்பாட்டிலிருந்து ஒலிப்பது கேயம். இவையே ஐவகை ஒலிகள்.

இசைக்கருவிகளின் ஓசைக்குரிய பலனை காரணாகமம் குறிப்பிடுகிறது. மத்தளம்- சுகத்தைத் தரும். தாளம் - சோகம் நீக்கும். படஹம்-பாவம் போக்கும். பேரீ - வளர்ச்சி (புஷ்டி) தரும். டக்கா - மகிழ்ச்சியளிக்கும். காஹளீ- சுகமளிக்கும். ஜல்லரி- விரும்பிய பயனைத் தரும். கும்ப வாத்தியம் - மோட்சத்தைத் தரும். வீணை, தம்புரா போன்ற நரம்புக்கருவிகள்- கோடி யாகங்கள் செய்த உயர்பலனைத் தரும். புல்லாங்குழல், நாதஸ்வரம் போன்ற துளைக் கருவிகள்-பிள்ளை,பேரன் முதலான வம்ச விருத்தியை நல்கும். மேளம், தப்பட்டை, பறை, தபேலா போன்ற தோற்கருவிகள்- வெற்றி தரும். சங்கொலி -விருப்பத்தை நிறைவேற்றும்; அனைத்து எதிரிகளையும் அழிக்கும்.

கோயில் விழாக்களில் நான்குவகை வாத்திய உபசாரங்கள் விதிக்கப்பட்டுள்ளன. வீணை, தம்புரா, வயலின் போன்ற மீட்டப்படும் கருவிகள் தத வாத்தியம் எனப்படும். முரசு, மத்தளம் போன்ற அடித்து ஒலிக்கப்படும் கருவிகள் ஆனத்தம் எனப்படும். புல்லாங்குழல், நாதஸ்வரம், மகுடி முதலான துளைக்கருவிகள் சுஷிர வாத்தியம் எனப்படும். சிறுதாளம், பெரிய (பிரம்ம) தாளம், ஜல்லரி (ஜால்ரா), கைமணி, எக்காளம், திருச்சின்னம், துந்துபி போன்ற உலோகக் கருவிகள் வாத்தியம் எனப்படும்.

தெய்வ ஊர்வலம் எங்கு நடந்தாலும், அங்கு தவறாமல் வாத்திய கோஷம் செய்யப்பட வேண்டும். வாத்தியமின்றி ஊர்வலம், வீதியுலா, கோயில் வலம், புறப்பாடு போன்றவற்றைச் செய்வது குற்றமாகும். நீராட்டல், நிவேதனம் செய்தல், தூப தீபங்கள் செய்யும் காலம், வலம் வரும் காலம், அதிகாலை ஆகிய முக்கியமான ஐந்து காலங்களில் தவறாமல் வாத்திய கோஷம் செய்யவேண்டும். இவ்வாறு செய்யப்படும் நாத உபசாரமானது, நாதரூபமான இறைவனுக்கு மிகவும் ஏற்புடையது. சுவாமி ஊர்வலத்தின்போது யானை, ஒட்டகம், குதிரை, காளை ஆகியவற்றின்மேல் இசைக்கருவிகளை வாசிக்குமாறு சுவாமி புறப்பாட்டு விதிமுறை கூறுகிறது. பல்வேறு இசைக்கருவிகளையும், அதனால் விளையும் நற்பயன்களையும் ஆகமங்கள் விளக்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு காண்போம்.

இசைக்கருவிகளில் சங்கு சிறப்பிடம் வகிக்கிறது. நீரில் தோன்றிடும் சங்கின் ஒலியானது பாவத்தைப் போக்கி, விரும்பிய பயனைத் தரக்கூடியதாகும். சுவாமி பூஜையின்போது நீராட்டலின் தொடக்கத்திலும் முடிவிலும், பூஜையின் முடிவிலும், மடப்பள்ளியிலிருந்து நிவேதனத்தை எடுத்துவர தோள்மீது ஏற்றும் சமயத்திலும், மந்திர புஷ்பார்ண காலத்திலும் சங்கொலி முழங்கவேண்டும்.

கையால் ஒலிக்கும் மணியானது தனுகண்டா எனப்படுகிறது. தேவர்களின் வருகைக்காகவும், அசுரர்கள் விலகுவதற்காகவும், தெய்வ வருகையின் அடையாளமாகவும் மணியோசை எழுப்பவேண்டும். பூஜையின் துவக்கவேளை, விநாயகரின் பூஜைக்காலம், கிரியாகாலம், புண்ய காலம், தூபதீப காலம், நிவேதன காலம், பலிகாலம் ஆகிய நேரங்களில் தவறாமல் மணியோசை எழுப்பவேண்டும். மணியோசையின்றிச் செய்யப்படும் பூஜைச்செயல் எதுவும் பயனற்றுப் போகும்.

மேலும், மணியோசை வகையில் ஒரு நாதம் மோட்சத்திற்காகவும், இந்த நாதம் போக சித்திக்காகவும், மூன்று நாதம் அனைத்து சித்திக்காகவும் என மூவகையாக அடிக்கப்பட வேண்டும். புண்யாஹ காலம், தூபகாலம், நிவேதன காலம் ஆகியவற்றில் இரு நாதமும், தீபம் காட்டும்போது ஒரு நாதமும், சிவன், விஷ்ணு நீங்கலாக பிற தெய்வங்களுக்கு மூன்று நாதமும் என அறிந்து ஒலிக்கச் செய்தல் முறையாகும்.

அதுபோல, பெரிய மணி ஒலிக்கவேண்டிய காலமும் வரையறுக்கப்பட்டுள்ளது. பூஜையின் தொடக்கம் - முடிவு, நித்யோற்சவ காலம், விநோதங்கள் காட்டும் காலம் ஆகிய நான்கு சமயங்களில் கோயிலில் பெரிய மணியை அடிக்க வேண்டும். அபிஷேகத் தொடக்கம் - முடிவு. அர்ச்சனையில் முடிவு, நிவேதனத் தொடக்க நேரம், உற்சவத் தொடக்க நேரம் - முடிவு நேரம், நாட்டிய உபசரிப்பின் முடிவு நேரம், கோயில் நடைதிறப்பு - மூடுதல் போன்ற முக்கியமான காலங்களில் மட்டுமே பெரிய மணியை ஒலிக்கவேண்டும்.

இனி, கோயிலில் பூஜைமுறையானது ஏதேனும் காரணத்தால் வழிதவற நேரிட்டால், அதற்காகச் செய்யவேண்டிய பிராயச்சித்தங்களைக் காண்போம்.

ஒருகால பூஜை நின்றுபோனால், அடுத்த காலத்தில் செய்யும் பூஜையை இருமடங்காகச் செய்யவேண்டும். இருவேளை இல்லாது போனால் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். மூன்று வேளை விடுபட்டால் பஞ்சகவ்ய அபிஷேகமும் ஒருநாள் பூஜை இல்லையென்றால் ஸ்நபனம், சாந்தி ஹோமமும் செய்யவேண்டும். ஐந்து நாள் பூஜை இல்லாவிடில் ஸ்நபனம், மூர்த்தி-ஹோமமும்; பதினைந்துநாள் இல்லையெனில் மேற்சொன்னவற்றுடன் திசாஹோமம், மகாஸ்நபனத்தையும் சேர்த்துச் செய்யவேண்டும். ஒரு மாதத்துக்குமேல் பூஜை நின்று போனால் தீர்த்த சம்ப்ரோக்ஷணம் செய்யவேண்டும்.

பிராயச்சித்தத்தில் கோயில் மூர்த்திக்குச் செய்யும் சாந்தி என்பது வேறு; சாந்தி ஹோமம் என்று சொல்லப்படுவது வேறு. சாந்தி என்பது, இறைவனிடம் நமது குற்றங் குறைகளைப் பொறுத்தருளுமாறு வேண்டி தெய்வ கோபத்தை நீக்கி மகிழ்விக்கும் முறையாகும். சாந்தி ஹோமம் என்பது பரிகார ஹோமமாகும். சாந்தி செய்வதில் பல கிரியைகள் உள்ளன. பஞ்சகவ்யம் தெளித்தல், கவ்ய அபிஷேகம், தீபம், மலர்கள், நிவேதனங்களை இருமடங்காக அளித்து உபசரித்தல், சீத கும்பத்தை சுவாமிக்குமேல் வைத்தல், பால், தயிர், நெய், இளநீர் ஆகியவற்றிலொன்றை பெருமளவு அபிஷேகம் செய்தல், அன்னப்பெரும்படையல் இடுதல், 27 நாள் வரை தொடர்ந்து சாந்தி ஹோமம் செய்தல், விழா நடத்துதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆண்டுதோறும் அல்லது மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட திதி, நட்சத்திர நாளில் செய்துவந்த உற்சவத்தை மாற்றி வேறுநாளில் செய்யக்கூடாது. அதுபோல 9 நாள், 18 நாள், 27 நாள் என செய்துவந்த மகோற்சவ நாட்களின் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் மாற்றக்கூடாது. அவ்வாறு மாற்றி விழா நடத்தினால், அது நாட்டை ஆள்பவர்களுக்கும், அரசுக்கும் தீமை பயக்கும். அவ்வாறு செய்ய நேர்ந்தால், முதலில் அவ்விடத்தில் சாந்தி செய்து, முன்புபோல விழா நடத்தவேண்டும். அடுத்த மாதத்தில் செய்யவேண்டியிருந்தால் இருமடங்கு நாள்முறையில் செய்யவேண்டும். அதாவது 9 நாள் உற்சவமென்றால் 18 நாள் செய்யவேண்டும். திசா ஹோமத்தையும் மூர்த்தி ஹோமத்தையும் முறைப்படி செய்தபிறகு முறையாக உற்சவத்தை மேற்கொள்ளவேண்டும். இந்த விதிமுறை, சுயம்புலிங்க வகைக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.

சுயம்பு அல்லாத தைவிகம், திவ்யம் ஆர்ஷகம், பாணலிங்கம், மானுஷலிங்கம் முதலான லிங்க வகைக்கு, மாத நட்சத்திரத்தையோ தீர்த்த நட்சத்திரத்தையோ அல்லது மற்ற முறையிலோ நிச்சயித்து உற்சவம் மேற்கொள்ளலாம். பரிகாரமாக மீண்டும் உற்சவம் செய்யும்போது அதன் நாள் எண்ணிக்கையைக் குறைத்தும் செய்யலாம்; தோஷமாகாது. அரசாங்க கலவரம், பெரும் பஞ்சம், அரசன் அல்லது திருடர்களின் அச்சுறுத்தல், பொருளில்லா நிலை முதலிய காரணங்களால் உற்சவம் நடத்த இயலாதுபோனால், அப்பொழுது மட்டும் முதலில் சாந்தியைச் செய்துவிட்டு குறைந்த நாட்களிலும் விழாவைச் செய்து முடிக்கலாம். கொடியேற்றுவதற்கு முன்பாக சந்நிதி வாகனத்துக்குரிய ரிஷப யாகத்தைச் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் கொடியேற்றிவிட்டால் ஆசாரியருக்கு குலநாசம் ஏற்படும். எனவே இதற்கு சாந்தி ஹோமத்தைச் செய்து பிறகு ரிஷப யாகத்தையும் பூஜையையும் செய்யவேண்டும். கொடியேற்றம் செய்யாவிட்டால் அரசுக்கு தாழ்வு ஏற்படும்.

கொடித்துணியை, ஊரை வலம் வந்தபின் ஏற்றுதல் முறை. வலம் வராமல் கொடியேற்றுவது குற்றமாகும். ஊரில் அசுபம் நிகழும். இக்குறையை நீக்க சாந்தி ஹோமம் செய்யவேண்டும். கொடிமரத்திலுள்ள வேதிகை முறைப்படி இல்லையென்றால் அசுபம் நிகழும். எனவே சாந்தி ஹோமத்துடன் சரியாக அமைக்கவேண்டும். கொடிமரம் இலக்கணமின்றி இருந்தால், அப்பகுதி நிர்வாகத்தினருக்கு அசுபம் உண்டாகும். இக்குறை நீங்க மூர்த்தி ஹோமம், சாந்தி ஹோமம் செய்யவேண்டும். கொடிமரத்தின் உபதண்டம் முறையற்று இருந்தால் அங்குள்ளோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதற்கும் சாந்தி ஹோமம் செய்யவேண்டும். கொடியிலுள்ள ரிஷப ஓவியம் இலக்கணப்படி அமையவில்லையென்றால் அரசுக்கு அச்சுறுத்தல் உண்டாகும். சாந்தி ஹோமம் தேவை. கொடிக்கயிறு அறுபட்டால் எதிரிகளால் துன்பம் நேரும். சாந்தி ஹோமம் செய்து கயிறு மாற்றவேண்டும். கொடித்துணி, கொடிக்கயிறு ஆகியவற்றை எலி கடிப்பது தோஷமாகும். இதற்கும் பரிகாரமாக சாந்தி ஹோமமே சொல்லப்படுள்ளது. கொடிமரம் முறிந்து கீழே விழுந்தால் நாட்டிற்கு அழிவு ஏற்படும். இதற்குப் பிராயச்சித்தமாக ஏழுநாட்கள் வேறு புதியகொடியை ஏற்றவேண்டும். கொடிக்கயிறும் தர்ப்பமாலையும் வலமாகச் சுற்றப்படாவிட்டால் தோஷமாகும். அகோர மந்திரத்தை ஆயிரம் முறை ஜெபித்தபின், வலமாகச் சுற்றினால் தோஷமகலும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !