நரசிம்ஹ ஜெயந்தி
மஹாவிஷ்ணு தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரம் நான்காவதாகும். இவர் அவதார தினத்தை நரசிம்ஹ ஜெயந்தி என ஒவ்வொரு வருஷமும் வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இரண்யனின் அண்ணன் இரண்யாட்சனை அணுகப்பெருமாள் கொன்றொழித்ததினால் திருமால் மேல் தீரா பகைக் கொண்டு வாழ்ந்து வந்தான் இரண்யன். தன்னையேக் கடவுளாகக் கருதி- இரண்யாய நம: என்று அனைவரும் சொல்லி வணங்க வேண்டும் என உத்திரவு பிறப்பித்தான். யாராலும் அவனை எதிர்க்க இயலவில்லை. ஆண்டவனிடம் பல வரங்கள் பெற்ற அவனைப் பகலிலோ, இரவிலோ, மனிதன், மிருகம் இவற்றால் அவனை அழிக்க முடியாது. அவன் அழிய நேரிட்டால் அவனது ரத்தம் ஒரு துளி கீழே சிந்தினாலும், அதன்மூலம் ஓராயிரம் இரண்யர்கள் தோன்றுவார்கள் என வரம் பெற்றான். அவனை வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அழிக்க முடியாது. அவனை எதிர்த்த அனைவரும் அழிந்தார்கள். திருமால் மேல் பகையோடு இருந்த இரண்யனின் மகன் பிரகலாதன் பெருமாள் பக்தனாக வளர்ந்து வந்தது இரண்யனுக்கு பிடிக்கவில்லை. தன் மகனையே பல வழிகளில் கொல்ல துணிந்த போதும் அது அவனால் முடியவில்லை.
ஒரு நாள் கடும் கோபத்தில் எங்கே இருக்கிறான் நீ வணங்கும் ஹரி? என மகளிடம் கேட்க, பிரகலாதன் எம்பெருமான் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றான். இதைக்கேட்டதும் இரண்யன் - திருமாலே, நேரில் வரப்பயந்து போய் தூணில் ஒளிந்திருக்கிறாயா? வெளியே வா. உன்னை கொன்றழிக்கிறேன் என ஆணவத்துடன் கர்ஜித்தவாறு காலால் ஒரு தூணை உதைத்தான். பக்தனைக் காக்க சித்தம் கொண்ட பெருமாள் அக்கணமே நரசிம்மமாக தூணைப் பிளந்து வெளியே வந்தார். நரன் என்றால் மனிதன். சிங்கம் என்பது விலங்கு. இரண்டும் கலந்த ஒரு உருவம் தான் நரசிங்கம். இரண்யனை அழிக்க வேண்டி முழுதாய் மிருகமும் இன்றி, முழுதாய் மனிதனுமின்றி இரண்டும் கலந்த உருவத்தில் தோன்றி பகல், இரவு அல்லாத மாலையில் அந்திவேலையில் அரண்மனை உள்ளேயும் இன்றி வெளியேயும் இன்றி நுழைவாயிலில் (வாயிற்படியில்) அமர்ந்து இரண்யனை தன் மடியில் கிடத்தி ஆயுதமின்றி, கூரிய நகம், பற்களால் அவன் உடலைக் கிழித்து இரத்தம் ஒரு துளி கீழே சிந்தாமல் பருகி இரண்யனை அழித்தார். உலகம் உய்வடைந்தது.
இனி, பன்னிரண்டு விதமான நரசிம்ம மூர்த்தி கோயில் கொண்டுள்ள ஸ்தலங்களை கண்டு களிப்போம். 1.)யோக நரசிம்மர் (சோளிங்கர்), 2.) தெள்ளிய சிங்கர் (திருவல்லிக்கேணி), 3.) சாந்த நரசிம்மர் (திருநீர்மலை), 4.) பாடலாத்ரி நரசிம்மர் (சிங்க பெருமாள் கோயில்) 5.) பானக நரசிம்மர் (மங்களகிரி). 6.) மேட்டழகிய சிங்கர் - உக்கிர நரசிம்மர் (ஸ்ரீரங்கம்) 7. ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர் (மங்களகிரி) 8.)லக்ஷ்மி நரசிம்மர் (அகோபிலம்), 9.) சுதர்சன நரசிம்மர் (தாடிக்கொம்பு), 10.) பிரகலா தவரத நரசிம்மர் (கீழ் அஹோபிலம்), 11.) ஹிரண்ய ஸம்ஹார நரசிம்மர். யார் ஒருவர் நரசிம்மரை இஷ்ட மூர்த்தியாய் வணங்கி வருகிறாரோ, அவருக்கு அஞ்ஞானம் அகன்று ஞான ஒளி வீசும் நரசிம்ம ஜெயந்தி நாளில் அவர் வீற்றிருக்கும் திருக்கோயில்களுக்கு சென்று பக்தியுடன் வணங்கி அருள்பெறுவோம்.