நரசிம்மர் கோவிலில் தேரோட்டம் விமரிசை
நரசிங்கபுரம் : நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, நேற்று, தேரோட்டம் நடந்தது. பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் அமைந்து உள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். இங்கு, 17ல், கொடியேற்றத்துடன் துவங்கிய, ஆனி பிரம்மோற்சவ திருவிழாவில், தினமும், உற்சவர் நரசிம்மர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா எழுந்தருளினார்.காலை 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு பத்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடந்து வருகிறது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.காலை, 6:00 மணிக்கு தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர், முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து, கோவிலை வந்தடைந்தார். பின், இரவு 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் உற்சவர் வீதியுலா வந்தார்.தேரோட்டத்தில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம் மற்றும் அதை சுற்றிஉள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் பங்கேற்றனர்.