உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்: உன்னால் எல்லாம் முடியும் என நம்பு!

ஜூலை 4 விவேகானந்தர் நினைவு நாள்: உன்னால் எல்லாம் முடியும் என நம்பு!

சுவாமி விவேகானந்தரின் தேச பக்திக்குள்ள ஓர் ஈடு இணையற்ற தனி சிறப்பு, அவருடைய ஆன்மிக அனுபூதியில் தான், மகத்தான தவ வலிமையில் தான் அடங்கியிருந்தது. அதனால் தான் அவரால் சமயம், சமுதாய துறைகளில் குறிப்பிடத்தக்க நிலையான ஒரு மறுமலர்ச்சியை ஒரே நேரத்தில் ஏற்படுத்த முடிந்தது. இந்த இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் குறிப்பிடத்தக்கவர்களாக நாம் பலரை சொல்ல முடியும். ஆனால் அவைஇரண்டிலும் குறிப்பிடத்தக்கவர்களாக மகாத்மா காந்திஜியை போல ஒரு சிலரை மட்டுமே கூற முடியும். அவர்களில் விவேகானந்தருக்குதான் முதலிடம் உண்டு

விவேகானந்தர் 1863 ஜனவரி 12 ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார்.

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. துறவறம்: 1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார்.

மறைவு: 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் இறைவனுடன் கலந்தார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் அரிய தகவல்கள் மற்றும் படங்களுக்கு கிளிக் செய்யவும்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !