வளர்பிறை பிரதோஷம்: பெருமானுக்கு அபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: பவுர்ணமிக்கு முன்னதாக, நேற்று மாலை நடந்த பிரதோஷ அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். காந்தகிரியில் நந்தியம் பெருமானுக்கு, பக்தர்களே அபிஷேகம் செய்தனர். வளர்பிறையில், நேற்று மாலை, பல்வேறு சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவிலில், நேற்று மாலை, பிரதோஷ அபிஷேகம் நடந்தது. 4:30 மணிக்கு, யாகசாலையில் கலச வேள்வி துவங்கியது.அதை தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், சொர்ணம் என, பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலுக்கே உரிய சிறப்பாக, பக்தர்கள் நேரடியாக, நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் வாய்ப்பு, நேற்றும், பக்தர்களுக்கு வாய்த்தது.அபிஷேகத்தை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் நந்தியம் பெருமான் அருள்பாலித்தார். பின், பிரதோஷ நாதர் உள் புறப்பாடு எழுந்தருளினார். இதே போல், வங்கனுார் விசாலாட்சி உடனுறை வியாசேஸ்வரர் மலைக்கோவில், அத்திமாஞ்சேரிபேட்டை சுந்தரேசனார், மட்டவளம் கோவத்ச நாதேஸ்வரர், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.