உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலைக்கு சூடம் கொண்டு செல்ல இந்த ஆண்டுமுதல் தடை!

சதுரகிரி மலைக்கு சூடம் கொண்டு செல்ல இந்த ஆண்டுமுதல் தடை!

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் சூடம் கொண்டு செல்வதற்கோ அதனை வழிப்பாதையில் ஏற்றி வழிபாடு செய்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.   பக்தர்கள் கொண்டு செல்லும் சூடன் பாக்கெட்டுகளை அடிவாரத்திலேயே பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 21 முதல் துவங்குகிறது.  இதில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பல லட்சம் பக்தர்கள் திரள்வார்கள்.   இவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் செய்வது குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் அடிவாரமான தாணிப்பாறையில் நடந்தது.   இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.  அதன்படி இந்த ஆண்டு முதல் பக்தர்கள் மலைக்கு சூடம் கொண்டு செல்வதற்கும் மலைப்பாதைகளில் ஆங்காங்கு சூடம் ஏற்றி வழிபடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.   

அடிவாரத்தில் பக்தர்களிடம் நடைபெறும் சோதனையில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதோடு சூடம் பாக்கெட்டுகள் இருந்தால் அவையும் பறிமுதல் செய்யப்படும்.  பக்தர்கள் மட்டுமின்றி மலையில் உள்ள கடைகளிலும் சூடம் விற்பனைக்கு தடை செய்யப்படும். அடிவாரத்திலிருந்து மலையில் உள்ள கோயில் வளாகம் வரை மலைப்பாதையில் தற்காலிக கடைகள் அமைப்பதற்கோ, அன்னதானம் வழங்குவதற்கோ அனுமதி கிடையாது.   இலவச தண்ணீர் பாக்கெட்டுகள் வழங்குவதற்கும், மலையில் உள்ள அன்னதான மடங்களில் தண்ணீர் பாக்கெட்டுகள், பாலித்தீன் டம்ளர்கள் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

தனியார் வேன், கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிவாரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தனியார் நிலங்களிலும் வயல்களிலும் நிறுத்தப்படும்.  அவர்கள் அங்கிருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் மூலம் அடிவாரத்தை வந்தடைய வேண்டும். மதுரை, திண்டுக்கல், தேனி, கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உட்பட பல்வேறு நகரங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் அனைத்தும் மாலை 4 மணிக்குள் அடிவாரம் வந்தடையும் வகையில் இயக்கப்படும்.  அதற்கு மேல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.  இரவு நேர சிறப்பு பஸ்கள் கிடையாது.   மதுரையிலிருந்து மதியம் 2 மணிக்கு பிறகு சிறப்பு பஸ்கள் இயக்கப்படாது. மலைப்பாதையில் அத்தியூத்து, கோரக்குண்டா, சின்னப்பசுக்கிடை, இரட்டைலிங்கம், பச்சரிசிப்பாறை ஆகிய 5 இடங்களி்ல் மீட்பு படையினர் முகாம் அமைக்கப்படும்.  மதுரை மாவட்டம் சாப்டூரிலிருந்து வரும் வாழைத்தோப்பு பாதை, தேனியிலிருந்து வரும் உப்புத்துறை வழிப்பாதைகள் பெரும் பள்ளத்தாக்குடன் ஆபத்து நிறைந்த பாதைகளாக உள்ளதால் அப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அந்த பாதையில் வருவதை தவிர்க்க வேண்டும்.   என்பது உட்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !