உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரலாற்றின் அடையாளமாக கற்கோவில்!

வரலாற்றின் அடையாளமாக கற்கோவில்!

மடத்துக்குளம்: முன்னோர்கள் செம்மையற்ற கற்களால் உருவாக்கி வழிபட்டகற்கோவில் மடத்துக்குளம் பகுதியில், நினைவுச்சின்னமாக உள்ளது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்இந்த திருக்குறளின் பொருள் வாழும் போது ஒழுக்கமாககட்டுப்பாடுடன், மற்றவர்களுக்கு வழிகாட்டி போல வாழ்பவனை தெய்வத்துக்கு சமமாக வழிபடுவர் என்பதாகும்.

இப்படி கடந்த காலத்தில் வாழ்ந்த முன்னோர்களின் நினைவாக கோவில் கட்டி வழிபட்டுள்ளனர். வழிபாடு தொடக்கம் தொடக்க காலமனிதர்கள் காடுகளிலும், மலை குகைகளிலும் குழுக்களாகவும், இனங்களாகவும் வாழ்ந்தனர். வேட்டையும், கால்நடை வளர்ப்பும் இவர்களின் தொழிலாக இருந்தது. இப்படி ப்பட்ட வாழ்க்கை முறையில், இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கும் போதும், காட்டு விலங்குகளால் தாக்கப்படும் போதும், உயிரை கொடுத்து தங்களை காப்பாற்றியவர்களையும், தங்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர்களையும் வழிபடுவது வழக்கம். கட்டுமான பொருட்கள் குறித்து அறியாத காலத்தில், தங்கள் மதிப்புக்குரியவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலோ அல்லது அதற்கு அருகில் உள்ள இடத்திலோ, ஒரு கல்லை அடையாளமாக வைத்து வழிபட தொடங்கினர். சிலகாலத்துக்குப்பின், இந்த இடத்தில் கருங்கற்களை பயன்படுத்தி சிறுகோவில்கள் அமைத்தனர்.

வழிபாட்டு முறை: இந்த கோவில்களில் அரிவாள், கொடுவாள், குத்தீட்டி, வேல், சூலம் மற்றும் நடுகற்கள் மட்டுமே வழிபாட்டு பொருள்களாக இருந்தன. காலண்டர், பஞ்சாங்கம் போன்றவைகளை அறியாத மக்கள் முழுநிலவான பவுர்ணமி, நிலவே காணாத அமாவாசை இரண்டையும் குறித்து வைத்து, அந்தநாளில் ஒன்றாக சேர்ந்து கோவில்களில் வழிபாடு செய்துள்ளனர். இந்த வழிபாட்டு நாளில் அசைவ உணவுகளை சமைத்து படையலிட்டும், அமாவாசை நடுஇரவில் முப்பூசை (கருங்கோழி, ஆடு, கரும்பன்றியை பலியிட்டு வணங்குவது) செய்தும் வணங்கியுள்ளனர்.

கற்கோவில் அமைப்பு: மடத்துக்குளம் அமராவதி ஆற்றங்கரையிலுள்ள கிராமங்கள், ஆயிரம் ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையானவை. இங்கு பழமையான குடிமக்கள் வசித்துள்ளனர். இவர்கள் உருவாக்கிய கற்கோவில் மேற்குநீலம்பூர், பாப் பான்குளம் எல்லையில் உள்ளது. இதன் அமைப்பு மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது. இரண்டு அடி அகலத்தில், நான்கு அடிக்கும் அதிக உயரத்திலுள்ள பல கற்களை ஒன்றன்பின் ஒன்றாக வைத்து சுவராக்கியுள்ளனர்.

நீள, அகலமான பலகற்களால் மேற்கூரை அமைத்துள்ளனர். இதற்குள் அடையாள கற்கள் மட்டுமே வழிபாட்டு பொருளாக உள்ளது. முன்புறம் சிறு இடைவெளி (வாசல்) மட்டும் விட்டு மற்ற இடத்தை அடைத்துள்ளனர். விளை நிலங்களுக்கு மத்தியில் கோவிலை அமைத்து வழிபட்டிருக்கலாம். ஆங்கிலேயர் ஆட்சிக்கு பின், புதிய புதிய பாதைகள் உருவாக்கப்பட்டதால் தற்போது, ரோட்டின் ஓரத்தில் இந்த கோவில் உள்ளது. மடத்துக்குளம் பகுதியிலுள்ள முதியவர்கள் கூறுகையில், இந்த கற்கோவில் பலதலைமுறையாக உள்ளது என பரம்பரை செவிவழி தகவல்கள் உள்ளன. இதை பைரவர் கோவில் என குறிப்பிடுகின்றனர். அமாவாசையன்று சிலர் இதில் வழிபாடு செய்தாலும், பூஜைகள் மிகவும் அரிதாகி நினைவு சின்னமாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !