ஆடிப்பூரம்: காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் கோலாகலம்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்துாரில் விழா சிறப்பாக நடைபெற்றது. அதே போல் காமாட்சி அம்மன் கோவில், ஆதி காமாட்சி அம்மன், துர்க்கையம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏனாத்துார் துர்க்கையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதற்காக, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து நேற்று காலை பக்தர்கள் பால்குடம் எடுத்த சென்றனர்.
அந்தந்த பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவில் அம்மன் ஊர்வலமும் நடந்தது.குறிப்பாக, ராஜாஜி மார்க்கெட் தண்டுமாரியம்மன் கோவில், உத்திரமேரூர் துர்கையம்மன் கோவிலில் பால் குட ஊர்வலம் நடந்தது. இதில், மிகவும் விசேஷமாக குன்றத்துார் திருநாகேஸ்வரம் ஸ்ரீதேவி பொன்னி அம்மனுக்கு, பெண்கள் சிறுவர்கள் என, 1,600 பேர், பால் குடம் ஏந்தி சென்று, அம்மனை வழிபட்டனர். மாமல்லபுரம் ஸ்தலமான பெருமாள் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்வசம் நடந்தது.