உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி 18 மலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

மழை வேண்டி 18 மலை கிராம மக்கள் சிறப்பு வழிபாடு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மழை வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் வேண்டி, 18 கிராமங்களை சேர்ந்த மலை வாழ் மக்கள், நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பெரிய மஞ்சவாடி, சின்னமஞ்சவாடி, கோம்பூர், காளிப்பேட்டை, நொனங்கானூர், எட்டிமரத்துப்பட்டி, போதக்காடு உட்பட, 18 கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள், தங்கள் பகுதியில் மழை பெய்யவும், குழந்தைகள் நோய், நொடியின்றி வாழவும் வேண்டி, தங்கள் பாரம்பரிய வழக்கப்படி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். இதற்காக, நேற்று காலை, தங்கள் கிராமங்களில் இருந்து கரியராமன், மாரியம்மன், காளியம்மன், வேடியப்பன், விநாயகர், ஈஸ்வரன் உள்ளிட்ட சுவாமி சிலைகளை, கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து, நடுப்பட்டியில் உள்ள வடக்குமலை பெருமாள் கோவில் அருகில் வைத்தனர். பின், கோவில் காளைகளை அங்கு நிறுத்தி, சிறப்பு பூஜை செய்தனர். பின், சுவாமி சிலைகளை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். பின், பேய், பிணி நீங்க, பெண்களுக்கு சாட்டையடி வழங்கப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் கீழே படுத்துக்கொள்ள அவர்களை தாண்டி, சுவாமி சிலைகள் எடுத்து செல்லப்பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தைகள் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகமாக உள்ளதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, 18 கிராம மக்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்தனர். இதில், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !