மாமல்லபுரம் கலைச்சின்னங்கள் இரவிலும்... ஒளிருமா?
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள, பாரம்பரிய கலைச்சின்னங்களை, இரவிலும் கண்டுகளிக்க, பிரகாச மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, சுற்றுலாப் பயணியர் வலியுறுத்துகின்றனர். பல்லவ பாரம்பரிய சிற்பக்கலைக்கு புகழ்பெற்றது, மாமல்லபுரம். சர்வதேச அளவில், இவ்வூர் மட்டுமே, வெவ்வேறு வகை சிற்பக்கலைகள், ஒரே இடத்தில் இடம் பெற்ற சிறப்பு பெற்றது. இங்குள்ள, அழகிய கடற்கரை கற்கோவில், பிற பகுதி பாறையில் வெட்டப்பட்ட கற்களால் அமைக்கப்பட்ட கட்டுமான வகையைச் சேர்ந்தது.ஐந்து ரதங்கள், நீள பாறையில், வெவ்வேறு வடிவ மற்றும் மேற்கூரை அமைப்பில், தர்மர், பீமர், சகாதேவர், அர்ச்சுணர், திரவுபதி என, பஞ்சபாண்டவ தனித்தனி ரதங்கள், கடவுள், யானை, சிங்கம், நந்தி என, செதுக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவை.
அர்ச்சுணன் தபசு, பாறை விளிம்பில், நிலமட்ட கீழ், மேலாக சிவன், தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள், பக்தர்கள், வனம், உயிரினங்கள், நாகங்கள், பாயும் கங்கை நதி என, புடைக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவை.திருமூர்த்தி, கிருஷ்ணர், தர்மராஜர், ராமானுஜர், வராகர், மகிஷாசுரமர்த்தினி என, சரித்திர, புராண சிறப்பு பெற்ற குடைவரை மண்டபங்கள், பாறையின் உட்புறம் குடையப்பட்ட வகையைச் சேர்ந்தவை.
வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்டவை என, 32 பாரம்பரிய கலைச்சின்னங்களுடன், சிற்பக்கலை அருங்காட்சியக இடமாக விளங்குகிறது.இவற்றை, தொல்லியல் துறை பராமரித்து பாதுகாக்கிறது. இந்திய, சர்வதேச பயணியர், இவற்றைக் காண வருகின்றனர்.தற்போது, சுற்றுலா மேம்பாட்டால் பயணியர் குவியும் நிலையில், காலை, 6:00 - மாலை, 6:00 மணி வரை, பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர். மாலை, 6:00 மணி கடந்து வரும், பயணியருக்கு அனுமதி இல்லை. எனவே, வளாக வெளியிலிருந்து, இரவிலும் காணும் வகையில், 20 ஆண்டுகளுக்கு முன், துறை சார்பில் பிரகாச ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டன.இரவிலும் கலைச்சின்னங்கள் பிரகாசித்து, பயணியர் ரசித்தனர். விளக்குகள், நாளடைவில் பயன்படுத்தப்படாமலும், பராமரிக்கப்படாமலும் வீணாகின. இவ்வளாகங்கள், விளக்குகளே இன்றி, இருளாக உள்ளன. கோடை காலத்தில், இரவு 7:00 மணி கடந்தும் பயணியர் வருகின்றனர். விடுதிகளில் தங்கியுள்ள பயணியர், இரவில் உலா வருகின்றனர்.இரவில், வாகன முகப்பு விளக்கை ஒளிர வைத்து காண்கின்றனர். இச்சூழலில், இரவிலும் காண, பிரகாச விளக்குகள் அவசியம்.