உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூட்டியிருந்த கோயில் முன் வழிபாடு திருவட்டார் அருகே பரபரப்பு!

பூட்டியிருந்த கோயில் முன் வழிபாடு திருவட்டார் அருகே பரபரப்பு!

திருவட்டார் : பூட்டியிருந்த கோயில் முன் பொதுமக்கள் பூஜை செய்ததால் திருவட்டார் அருகே பரபரப்பு ஏற்பட்டது. திருவட்டார் அருகே மேக்கோடு, கோட்டவிளை தர்மசாஸ்தா கோயிலை தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இக்கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. கோயில் பழுதடைந்து காணப்படுவதால் தேவசம்போர்டு நிர்வாகம் இரண்டு மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்து பூஜைகள் செய்வதாக கூறியது. பொன்மனை சிவன் கோயிலின் கீழ் உள்ள புனித ஸ்தலமான இங்கு பூஜைகள் முறைப்படி காலை நடந்து வந்துள்ளது. தற்போது வழக்கத்திற்கு மாறாக இப்பூஜை முறை மாற்றி மாலை நேரத்திலும் மற்றும் முறையான நேரத்தில் நடத்தாமல் ஏதாவது ஒரு நேரத்தில் பூஜைகள் நடக்கிறது. இதனால் இப்பகுதி பக்தர்கள் தினமும் முறைப்படி காலை பூஜை செய்ய வேண்டுமென முறையிட்டனர். ஆனால் இதை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. இதனால் பக்தர்கள் அப்பகுதி இந்து முன்னணி பிரமுகரும், அயக்கோடு பஞ்., தலைவருமான ஜெகதீஸ்குமார் தலைமையில் ஒன்று சேர்ந்து கோயிலில் முறைப்படி காலை பூஜை என அறிவித்தனர். ஆனால் பூஜாரி வரவில்லை. இதனால் கோயில் முன்வாசல் திறக்க முடியவில்லை. பூட்டிய கோயில் முன் பூஜைகள் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. புரனமைப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கும் இக்கோயிலை விரைவாக சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி, முறையான பூஜைகள் நடத்த சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்பது இப்பகுதி பக்தர்கள் கோரிக்கையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !