கந்தர் சஷ்டி விழா கோலாகலம்: மருதமலையில் பக்தர் வெள்ளம்
கோவை : மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தர் சஷ்டி விழாவையொட்டி நடைபெற்ற சூரசம்ஹார விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முருகனின் ஏழாவது படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர்சஷ்டி விழா அக்., 20ல் காப்புகட்டுதல் நிகழ்ச்சியோடு துவங்கியது. கோவில் மகாமண்டபத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு, வாஸ்துசாந்தி, கணபதிேஹாமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு, காப்புக்கட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.கடந்த நான்கு நாட்களாக, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. நேற்று மாலை 3:30 மணிக்கு, சூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் கொடிமரத்தின் கீழ், வேலுக்கு பூஜை செய்து, எழுந்தருளிய முருகப்பெருமான், கோவிலிற்கு தெற்கே, தாரகாசுரனை அம்பு எய்தி வதம் செய்தார்.மேற்கே, பானுகோபன்சுரனையும்,வடமேற்கில் சிங்கமுகாசுரனையும், வடக்கில் சூரபத்மனையும் வதம் செய்தார். முருகப்பெருமானின் ஆக்ரோஷத்தை குறைக்க பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிேஷகம் செய்யப்பட்டது. நிறைவாக, சுப்ரமணியசுவாமி, வள்ளிதெய்வாணை சமேதராக, தங்கமயிலில் உலா வந்தார்.தங்கத்தேரில், முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியருளினார். இன்று காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு பாரம்பரி முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடை பெறுகிறது. நாளை சஷ்டி விழா நிறைவு பெறுகிறது.