சகல பிரச்னைகளும் நீங்கும் அறுகாமிர்தம்!
தூர்வா என்று ஞான நூல்கள் சிறப்பிக்கும் அறுகம்புல்லை, பிள்ளையாருக்குச் சாற்றி வழிபடுவதை தூர்வாயுக்ம பூஜை என்பார்கள். இதில் விநாயகருக்கு அறுகம்புற்களால் மேடை அமைத்து, அவரது 21 திருநாமங்களைச் சொல்லி அர்ச்சித்து வழிபடுவார்கள். அதேபோல், பிள்ளையாரை வேண்டிக்கொண்டு விரதம் இருப்பவர்களுக்கு, தீர்த்தத்தில் அறுகம்புல் இட்டு அத்துடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு அந்தத் தீர்த்தத்தை வழங்குவதுண்டு இதை கணேச அறுகாமிர்தம் என்பார்கள். விநாயகர் சதுர்த்தி தொடங்கி அடுத்தடுத்த நாள்களில் முறையே பக்தி கணபதி, பால கணபதி, லட்சுமி கணபதி, தருண கணபதி, சந்தான கணபதி, ருணவிமோசன கணபதி, சங்கடஹர கணபதி, ஸ்வர்ண கணபதி என்ற வரிசையில் பிள்ளையாரைப் பக்தியோடு வழிபட்டு, அறுகாமிர்தம் அருந்தி வர வேண்டும். இதனால் பிணிகள், கடன் தொல்லை முதலான சகல பிரச்னைகளும் நீங்கும்; சந்தோஷம் பெருகும்.