உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் திருக்கோயில், மண்டோகலுப்

பாலமுருகன் திருக்கோயில், மண்டோகலுப்

பெர்த் நகரிலிருந்து 38 கி.மீ. தொலைவில், மண்டோகலுப் என்ற இடத்தில் அமைந்துள்ளது பாலமுருகன் திருக்கோயில், இக்கோயிலும் ஒரு குன்றின் மீதே கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலை இலங்கைத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் இணைந்து கட்டியுள்ளனர். நான்கு நிலை கோபுரம் இக்கோயிலை மிகச் சிறப்பாக அலங்கரிக்கிறது. உச்சியில் நம்மூர் கோயில்களில் காணப்படுவதுபோல் பிரம்மாண்டமாக, ‘ஓம்’ எனும் வாசகம் மின்னொளியில் பிரகாசிக்கிறது. தற்சமயம், ஆகமவிதிப்படி கோயிலை விஸ்தரிக்கும் திருப்பணிகள், பத்து லட்சம் டாலர் செலவில் நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் தைப்பொங்கல், தைப்பூசம், தமிழ்ப் புத்தாண்டு சமயங்களில் ஏராளமானோர் வருகை தருகின்றனர். பொதுவாக, கோயில் நடை, காலை 6.30- 12.00 மணி வரையிலும், மாலை 6.30 - 9.00 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது. தற்சமயம், காலை 7-7.30 மணி வரையிலும், மாலை 7.30 - 8.00 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் கொலு, துர்கா பூஜை அமர்க்களமாய் நடைபெறுகிறது. இக்கோயிலில் உள்ள நடராஜர் சிலை முன், நடனம், கச்சேரிகள், கதாகாலட் சேபம் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !