மெல்போர்ன் முருகன் கோயில்
விக்டோரியா மாநிலம், மெல்போர்ன் நகரின் மேற்கு வெளிப்புறத்தில், ‘சன் சைன் நார்த் ’ பகுதியில் அமைந்துள்ளது இந்த முருகன் திருக்கோயில், முருகப்பெருமான் வள்ளி -தேவசேனா சமேதராக கருவறையில் அருள்பாலிக்கிறார். வெளிப்பிராகாரத்தில் சிவபெருமான், பார்வதியும் மற்றும் விநாயகரை தனிச் சன்னிதிகளில் தரிசிக்கலாம்! நவக்கிரகப் பிரதிஷ்டையும் உண்டு. முருகர், சண்முகர் என இருவருக்கும் வசந்த மண்டபங்கள் உண்டு. தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு மற்றும் துர்கா ஆகியோரும் தனித் தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோயிலுக்கு வெளியே அனுமன் அருள்பாலிக்கிறார். திருக்கோயில் வாசல் மாடத்தில் முருகன், வள்ளி, தேவசேனாவுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இம்மூர்த்தங்களுக்குப் பின்புறம் மயில் காணப்படுகிறது. முதன் முதலில் இங்கு வேல்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாம். இது, ஜாப்னாவிலிருந்து ஒரு பெண் பக்தரால் கொண்டு வரப்பட்டது. இந்த வேல் பஞ்ச லோகத்தால் ஆனது. கோயில், காலை 7.30 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.30 முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும். தினமும் காலை 7.30 மணிக்கும் இரவும் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.