உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்

இடியும் தருவாயில் பாம்பன் விநாயகர் கோயில்

ராமேஸ்வரம்:400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் அருகே உள்ள விநாயகர் கோயில் கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நுாற்றாண்டில் உருவானது. இக்கோயில் பிரகாரங்கள்,கோபுரங்களை ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் கட்டினர். இக்கோயிலில் தரிசிக்க அக்காலத்தில் பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், பாம்பன் கடலை கடந்து செல்ல வேண்டும். அக்காலத்தில் பாம்பன் கடல் சிறிய நதியாக இருந்ததால்,பாம்பன் வாராவத நதிஎன்றழைக்கப்பட்டது. இந்த நதியை கடந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், குதிரையில் வரும் மன்னர்கள், வீரர்கள் நதியை கடக்கும் முன் ஓய்வெடுத்து செல்ல பாம்பன் நதியின் இரு கரையிலும் சத்திரத்துடன்(தங்கும் விடுதி) கூடிய விநாயகர் கோயில் கட்டினர். இந்த விநாயகரை தரிசித்து பாம்பன் நதியை எளிதில் கடந்து செல்லலாம் எனவும், பின் ராமேஸ்வரம் கோயிலில் நீராடி சுவாமி, அம்மனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

400 ஆண்டு பழமையான பாம்பன் பாலம் விநாயகர் கோயில் தற்போது ராமநாதபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்தாலும், இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் பாலம் கிழக்கே உள்ள கோயில் பராமரிப்பு இன்றி கோபுரத்தில் செடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பிரசித்தி பெற்ற பாம்பன் பாலம் விநாயகர் கோயிலை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விநாயகர் கோயில் பூஜாரி நம்புராஜன் கூறுகையில்: பக்தர்கள் அக்காலத்தில் விநாயகர் கோயில் சத்திரத்தில் ஒய்வெடுத்து, இங்குள்ள தீர்த்த கிணற்றில் நீராடிய பின் பாம்பன் நதியை கடந்து சென்றுள்ளனர். தற்போது கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டு இடியும் தருவாயில் உள்ளதால், புதுப்பிக்க ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள் முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !