கங்காபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
பொள்ளாச்சி: நெகமம், மஞ்சம்பாளையம் கங்காபரமேஸ்வரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். நெகமம் அடுத்துள்ள ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பாளையத்தில், பழமையான கங்காபரமேஸ்வரி, வீரபத்திரசாமி கோவில் உள்ளது. கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 25ம் தேதி சிறப்பு பூஜை, பூச்சாட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்கியது. 8ம் தேதி சக்தி கலசம் எடுத்தல், அம்மனுக்கு நகை அணிவித்தல் மற்றும் அபிேஷக அலங்கார ஆராதனை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை, மாவிளக்கு எடுத்தல், வீரபத்திரசாமிக்கு பொங்கலிடுதல் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு குண்டம் திறந்து, குண்டம் வளர்க்கும் நிகழ்வு நடந்தது. நேற்று காலை அம்மன் அழைப்பும், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானமும், மஞ்சள் நீராடலுடன் நடந்தது.