1,006 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: அறநிலையத் துறை உத்தரவு!
தமிழகத்தில், அரசு தரப்பில் நடத்தப்படும், 1,006 இலவச திருமணத்துக்கான ஜோடிகளை தேர்வு செய்து, அதன் விவரங்களை விரைந்து அனுப்பி வைக்கும்படி, இந்துசமய அறநிலையத் துறை இயக்குனர் சந்திரகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, 1,006 ஜோடிகளுக்கு, இலவச திருமண வைபவம் நடத்தி வைக்க, இந்துசமய அறநிலையத் துறை சார்பில், தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதற்காக, ஜோடிகளை தேர்வு செய்து, அதன் முழு விவரங்களையும் உடனுக்குடன் அனுப்பி வைக்கும்படி, இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்களுக்கு, தமிழக ஆணையர் சந்திரகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வு செய்யப்படும் ஜோடி, இந்துவாக இருக்க வேண்டும். வயது வரம்பு பெண்ணுக்கு 19ம், ஆணுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இருப்பிடத்தை உறுதிப்படுத்த, வி.ஏ.ஓ., சான்று, முகவரியை உறுதிப்படுத்த ரேஷன் கார்டு நகல், மற்றும் வயதை உறுதிப்படுத்த பள்ளிச் சான்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பம், இணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் கோவில் ஆய்வாளர் அலுவலகத்தில், இலவசமாக பெற்று கொள்ளலாம். இரு பக்கம் கொண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதில் மணப்பெண், மாப்பிள்ளை புகைப்படத்தை ஒட்டி, அதோடு, அனைத்து சான்று நகல்களையும் இணைத்து, திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். ஒரு வாரத்தில், இப்பணியை முடிக்க, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணை ஆணையர் கட்டுப்பாட்டில், தலா 100 ஜோடி வீதம், மொத்தமுள்ள 28 இணை ஆணையர் கட்டுப்பாட்டில், 1,006 ஜோடி தேர்வு செய்யப்படுகின்றனர். முதலில், விண்ணப்பம் செய்வோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக, முதல் ரக கோவில்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மணப்பெண்ணுக்கான தாலி, பட்டுப்புடவை, கால் விரல் மோதிரம், மாப்பிள்ளைக்கு பட்டுவேட்டி, பட்டுச் சட்டை, துண்டு, பண்ட பாத்திரம் உள்ளிட்ட சீர்வரிசைகள், 1,006 ஜோடிகளுக்கும், அரசு தரப்பில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. சென்னை அல்லது திருச்சியில், திருமண வைபவம் நடத்த, அரசு தரப்பில் பரிசீலனை நடந்து வருகிறது. அரசு செலவிலேயே, ஜோடிகள் அழைத்து செல்லப்பட்டு, திருமணம் முடிந்து, மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.