கால பைராஷ்டமி
கால பைரவர் அவதரித்த, கார்த்திகை மாதம் வளர்பிறை அஷ்டமியில் அவரைக் குறித்து ‘கால பைரவ பூஜை விரதம் ’ என்று செய்வார்கள். கலசத்தில் பைரவர் வடிவத்தை வைத்து, சிவபூஜை செய்வதைப் போலவே பூஜை செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை அஷ்டமியில் இந்தப் பூஜை செய்வது விசேஷம். முடியாத பட்சத்தில் கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி தினத்திலாவது இந்தப் பூஜையைச் செய்வது நல்லது. இதனால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்; யம பயம் இருக்காது. அதேபோல் ஐப்பசி மாதம் தேய்பிறை அஷ்டமியை கால பைராஷ்டமி எனப் போற்றுவார்கள்.
அன்று கோயிலுக்குச் சென்று பைரவ மூர்த்திக்கு நிகழும் விசேஷ வழிபாடுகளில் கலந்துகொண்டு, வடை மாலை சாற்றுவதுடன் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். இதனால் கடன் தொல்லை, வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப பிரச்னைகளால் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் ஆகியன நீங்கும்; தன்னம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.