தேடி வந்தாள் அம்பிகை!
ஒருமுறை பார்வதியும் பரமேஸ்வரரும் திருக்கயிலையில் விளையாட்டாக உரையாடிக் கொண்டிருந்தனர். இறைவனாரின் திருக்கண்களைப் பற்றி அம்பாள் வினவ, அவையே சூரியனும் சந்திரனும் என்று விடையளித்தார் பரமன். அதே விளையாட்டில் ஐயனுடைய கண்களைப் பொத்தி அம்பாள் சிரிக்க. ஐயனும் சிலிர்த்துப் போனார். இருப்பினும் அந்தச் சில கணங்கள் உலகம் இருளுக்குள் மூழ்கியதைக்கண்ட கருணை நாயகி. உயிர்களுக்கு அதனால் ஏற்படட தவிப்புக்குப் பிராயச்சித்தம் தேட விழைந்தாள். ‘தவம் செய்ய வேண்டும்; தக்க இடம் எது? அம்மை கேட்க, ‘காஞ்சிபுரம்’ என்றார் சிவனார். காஞ்சிக்கு வந்து அங்கே மணலால் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள் அம்மை. அம்பாளின் அன்பை உலகுக்குக் காட்டும் விதத்தில் சிவனார் திருவிளையாடல் நிகழ்த்த, கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
ஆற்று வெள்ளத்தில் தன் அருமைபெருமையாக அமைத்த மணல் லிங்கம் கரைந்துவிடுமோ என்று பதறிய அம்பாள். அப்படியே அதை ஆலிங்கனம் செய்து ‘விடமாட்டேன்’ என்று பற்றிக்கொண்டாள். அம்பாளின் பிடியில் ஐயனும் இறுகிக்கொள்ள ஐயனுக்குத் ‘தழுவக் குழைந்தநாதர்’ எனும் சிறப்புத் திருநாமமே ஏற்பட்டது. அம்பாளுக்கு நெருடல் ஓயவில்லை. ஐயனிடமிருந்து பிரிந்து தனியாக இருப்பதால்தானே இந்த நிலைமை! அவருடைய திருமேனியுடன் ஒன்றிவிட்டால்...? இந்த எண்ணம் உருவானவுடன் அம்மை. ஐயனை வேண்டினாள். கயிலையை விடவும் உயர்ந்த காஞ்சி; அதை விடவும் உயர்ந்த தலத்தில் தவம் செய்யும்படி ஐயன் ஆணையிட்டார். அத்தகைய தலம்தான் திருவண்ணாமலை. தம்மை வழிபடாமல், சிவனாரை மட்டுமே வலம் வந்து வழிபட்டுச்சென்ற பிருங்கி முனிவரின் செய்கையால் வருந்திய அம்பிகை, சிவனும் சக்தியும் வேறு வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்த விரும்பினாள். அதன்பொருட்டு இந்தத் தலத்துக்கு வந்து விரதமிருந்து வழிபட்டு, இறைவனின் திருமேனியில் வாம பாகத்தைப் பெற்றதாகவும் ஒரு திருக்கதை உண்டு.