எல்லாம் உங்கள் கையில்
உங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நபிகள் நாயகம். உலகில் நல்ல விஷயங்களும், படுகுழியில் தள்ளும் விஷயங்களும் இருக்கின்றன. நல்லதைத் தேர்ந்தெடுப்பவன் முன்னேறுவான். மற்றவர்கள் பின்தங்குவர். ஒருமுறை நாயகம் மக்களிடம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது” என்றார். உடனே சிலர் அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக் கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?”என்றனர்.
அதற்கு நாயகம் யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நன்மையான செயல்களை செய்கிறானோ, அவனுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதைஅலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு துன்பம் மிகுந்த நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது” என்றார். இதில் இருந்து, இறைவன் தந்துள்ளவற்றில் நல்லதை தேர்ந்தெடுக்கும் உரிமையும், கெட்டதை தேர்ந்தெடுக்கும் உரிமையும் நமக்கு உள்ளது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால் மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். இங்கே நல்லது செய்து சிரமப்பட்டாலும் பரவாயில்லை. சொர்க்கத்தில் இனிய வாழ்வை அனுபவிக்கலாம். எதை செய்ய வேண்டுமென நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.