உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த கோவிலில் கும்பாபிஷேக விழா

துர்வாச முனிவர் பிரதிஷ்டை செய்த கோவிலில் கும்பாபிஷேக விழா

பவானிசாகர்: பவானிசாகர், டணாய்க்கன் கோட்டை கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. பவானிசாகர், மேட்டுப்பாளையம் சாலை, கீழ்பவானி வாய்க்கால் அருகே, டணாய்க்கன் கோட்டை கோவில் உள்ளது. துர்வாச முனிவரால், பிரதிஷ்டை செய்யப்பட்ட, ஏழு ஸ்தலங்களில் முதன்மையானதாக போற்றப்பட்ட, இக்கோவில், பவானிசாகர் அணை கட்டும் முன், அணை நீர்த்தேக்கப்பகுதியில் அமைந்திருந்தது. கடந்த, 1948ல் அணை கட்டுமான பணி துவங்கியபோது, கோவிலில் இருந்த சுவாமி சிலைகள் அகற்றப்பட்டு, கீழ்பவானி வாய்க்கால் அருகே,கோவில் கட்டி, பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு, விநாயகர், சோமேஸ்வரர், மங்களாம்பிகை, மாதவராயப்பெருமாள், மஹாலட்சுமி, வீரபத்திரர் ஆகிய சுவாமிகளுக்கு, தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலின், மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, நவ.,29ல் தொடங்கியது. நேற்று அதிகாலை, நான்காம் கால யாகபூஜையை தொடர்ந்து கோபுரங்களுக்கு, கலசம் எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 6:20 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. பின், சோமேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சோமசேகர குருக்கள் சர்வ சாதகத்தில், கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு, அபிஷேகம், சிறப்பு அலங்காரமும், மாலை, 5:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !