உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை ‘ரோப்வே’ வருவதில் தொடரும் சிக்கல்

சபரிமலை ‘ரோப்வே’ வருவதில் தொடரும் சிக்கல்

சபரிமலை: பம்பை- சபரிமலை சன்னிதானம் இடையே சரக்கு போக்குவரத்துக்கான ‘ரோப்வே’ திட்டத்தில் பல துறைகளின் அனுமதி பெறவேண்டி இருப்பதால் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது. பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு டிராக்டர்களில் பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், பக்தர்களுக்கும் சிரமம் ஏற்படுத்துகிறது. தற்போது 6 மணி நேரம் மட்டுமே டிராக்டர்கள் ஓட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சன்னிதானத்தில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பொருட்களை கொண்டு செல்ல ‘ரோப்வே’ அமைக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதனை சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டியும் அங்கீகரித்தது. ஆனால் இந்த திட்டம் தொடங்குவதற்கான முக்கிய பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. தேசிய வனம் மற்றும் வனவிலங்கு வாரியம், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை, தேசிய புலிகள் சரணாலய அதாரிட்டி போன்ற துறைகளில் இருந்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை.பெரியாறு புலிகள் சரணாலய காடுகள் என்பதால் மரம் வெட்டுவது பெரிய தடையாக உள்ளது. வெட்டப்படும் மரங்களுக்கு பதில் எங்கு மரம் நட்டு வளர்க்கப்படும்? என்ற கேள்விக்கு விடை இல்லை. 2014-ல் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. 2019-ல் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.பம்பை ஹில்டாப்பில் தொடங்கும் இந்த ரோப்வே நீலிமலை டாப், மரக்கூட்டம் வழியாக மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் போலீஸ் தங்கும் விடுதி அருகே சேரும். ஒரே நேரத்தில் 12 டன் பொருட்கள் கொண்டு வரமுடியும். வனத்துறையின் தடையை சமாளித்து இத் திட்டம் எப்போது வரும் என சொல்ல முடியாத நிலை நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !